ஐதராபாத்: மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் வில்லன் வேடத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாள திரையுலகில் ஹீரோ கேரக்டர்களில் நடித்து வருபவர் ஜோஜு ஜார்ஜ். சமீபத்தில் ‘இரட்ட’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் ரிலீசாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜோசப், நாயாட்டு, ஆக்ஷன் ஹீரோ பிஜு உள்பட பல மலையாள படங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் கடந்த 2021-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆந்தாலஜி படத்திலும், ‘பபூன்’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் இப்போது தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் காந்த் ரெட்டி இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தொடர்ந்து ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜோஜு ஜார்ஜ் இதில் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார்.
