லாகூர்: ஊழல் குற்றச்சாட்டு, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இம்ரான் கானை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்தபோது, விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து அவற்றை மலிவு விலையில் விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இஸ்லாமாபாத் நீதிமன்ற பெண் நீதிபதியை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இதையொட்டி லாகூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் .இம்ரானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இம்ரான் கானின் வீட்டின் அருகே குவிந்த தொண்டர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போலீசாருக்கும் இம்ரான் கான் கட்சி தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 54 போலீசார் உட்பட 62 பேர் காயமடைந்துள்ளனர். போலீசாருக்கு துணையாக ரேஞ்சர்ஸ் என்ற சிறப்பு பாதுகாப்பு படையினரும் அங்கு வரழைக்கப்பட்டனர். இதனிடையே, போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கட்சி மேல்முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதி, இம்ரானை கைது செய்ய இன்று காலை 10 மணி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.