புதுடெல்லி: இன்புளூயன்சா துணை வகையான எச்3என்2 வைரஸ் பாதிப்புடன், கொரோனா பாசிடிவ் விகிதமும் படிப்படியாக அதிகரிப்பதால் அனைத்து மாநில அரசுகளும் நோய் பரவல் தடுப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவகால இன்புளூயன்சா துணை வகை எச்3என்2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பாசிடிவ் விகிதமும் படிப்படியாக அதிகரிப்பதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்புளூயன்சா பாதிப்புடன் சில மாநிலங்களில் கொரோனா பாசிடிவ் விகிதமும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். எனவே அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளும், காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச நோய் தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்த கண்காணிப்பு செயல்பாட்டு வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும். போதிய அளவு மருந்துகளை இருப்பில் வைப்பது, மருத்துவ ஆக்ஸிஜன் தடையின்றி கிடைப்பது, கொரோனா மற்றும் இன்புளூயன்சாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதலை உறுதி செய்ய வேண்டும். சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 456 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
