புதுடெல்லி: ‘அரசாங்கத்தை போலவே தனியார் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று ‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பேசினார். அதில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரலாறு காணாத அளவுக்கு மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அரசு உயர்த்தி உள்ளது. அரசாங்கத்தை போலவே தனியார் துறையினரும் தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் நாடு அதிகபட்ச நன்மையை பெறும். கடந்த காலத்திற்கு மாற்றாக ஜிஎஸ்டி, வருமான வரி குறைப்பு, கார்ப்பரேட் வரி காரணமாக வரிச்சுமை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2014ல் மொத்த வரி வருவாய் ரூ.11 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இது 200 சதவீதம் அதிகரித்து 2023-24ல் ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2013-14ல் 3.5 கோடி மக்களே தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து வந்த நிலையில் தற்போது இது 6.5 கோடியாக அதிகரித்துள்ளது. வரி செலுத்துவது என்பது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான கடமையுடன் நேரடி தொடர்புடையது. அந்த வகையில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்பதற்கு சான்றாகும். மேலும் அவர்கள் செலுத்தும் வரி, பொது நன்மைக்காக செலவிடப்படுகிறது என மக்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
