×

குஞ்சப்பனை -செம்மனாரைக்கு அரசு பஸ் சோதனை ஓட்டம்

ஊட்டி : கோத்தகிரி அருகே செம்மனாரை பழங்குடியின கிராமத்திற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் பொருட்டு கடந்த இரு நாட்களாக அரசு பஸ் இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை அருகே கோழிக்கரை, செம்மனாரை, கீழ்கூப்பு உள்பட ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு செல்லும் சாலையானது மிகவும் குறுகலாகவும், சரிவான உள்ளது.

மேலும் குறுகலான வளைவுகளை கொண்டதாகவும் உள்ளது. இதனால் இப்பகுதிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இக்கிராமத்தில் வசிக்க கூடிய பொதுமக்கள் மேட்டுபாளையம் செல்ல வேண்டும் என்றால் மரமரம் சோதனை சாவடி வரை சுமார் 6 கி.மீ., தூரம் வரை நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து செல்கின்றனர். கோத்தகிரி வர வேண்டும் என்றால் குஞ்சப்பனைக்கு வந்து,அங்கிருந்து பஸ் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.

அதில் வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்பட பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால்,அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.இந்நிலையில் செம்மனாரை பகுதிக்கு பஸ் இயக்க திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து குஞ்சப்பனையில் இருந்து செம்மனாரைக்கு அரசு பஸ் இயக்க சோதனை ஓட்டம் நடந்தது. பஸ்சில் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியுடன் ஏறி பயணித்தனர்.

இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஞான பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதிகாரிகள் கூறுகையில், இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றவும், சாலையோர தடுப்புச்சுவர் கட்டவும் வனத்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை கேட்டுள்ளோம். அவர்கள் அந்த பணியை முடித்த பிறகு, இந்த வழித்தடத்தில் அரசு பஸ் ஒரு நாளைக்கு 3 முறை இயக்கப்படும், என்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Tags : Kunjapanai ,Semmanarai , Ooty: For the last two days, government buses have been running a trial to provide transportation to Semmanarai tribal village near Kotagiri.
× RELATED கோத்தகிரி மலைப்பாதையில் மண்சரிவுகளை அகற்றும் பணி தீவிரம்