×

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அவசர உத்தரவு ஆவணப்பிழையாகும் அரசு தரப்புக்கு வாய்ப்பு தராததும் பாரபட்சம்தான்: யூடியூபர் சங்கர் வழக்கில் 3வது நீதிபதி கருத்து

சென்னை: அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப்பிழையாக கருதப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். யூடியூபர் சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் கடந்த மாதம் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் யூடியூபர் சங்கர் மீது தொடரப்பட்ட குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி, அரசு தரப்புக்கு உரிய அவகாசம் தராமல், அரசு தரப்பின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பளிக்க முடியாது என்று கூறி அரசு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் எந்த தீர்ப்பு சரியானது என்று முடிவு செய்ய நீதிபதி ஜி.ஜெயசந்திரனை நியமனம் செய்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 3வது நீதிபதி விசாரணை நடத்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அளித்த தீர்ப்பு வருமாறு: சங்கரை விடுவிக்க கோரி அவரது தாய் தொடர்ந்த வழக்கு மே 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மறு நாளுக்கு தள்ளிவைத்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல், உயர் நீதிமன்ற விதிகளின்படி அரசு தரப்பு பதில் தர அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு அமர்வில் இருந்த மூத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். ஒரு நீதிபதி ஆவணங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், மற்றொரு நீதிபதி அரசு தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உயர் நீதிமன்ற விதியின்படி அரசு தரப்புக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். அடிப்படை உரிமையை பாதுகாக்க தங்களின் மனதை செலுத்தி விசாரணை நடத்துவதற்காகவே ஆட்கொணர்வு மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பட்டியலிடப்படுகிறது. ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது அந்த உத்தரவு நியாயமாகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். இதுதான் இயற்கை நியதியாகும்.

இந்த வழக்கில் அந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், அந்த நீதிபதி தனது கவனத்தை வழக்கில் முழுவதுமாக செலுத்தவில்லை. இது அந்த உத்தரவின் தன்மையையே இழந்துவிடுவதாகவே கருதப்படும். சட்ட நடைமுறைகள் மற்றும் இயற்கை நியதி ஏற்கப்படவில்லை என்பது மற்றொரு நீதிபதியின் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்படாதது தெளிவாக தெரிகிறது. அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளதன் மூலம் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது ஆவணப்பிழையாகவே கருத்தப்படும்.

நியாயமான விசாரணையின்றி தீர்ப்பளிக்கப்படக்கூடாது என்று லத்தீன் மொழியில்”ஆடி ஆட்டம் பாட்டம்” என்று கூறப்படுவது ஜனநாயக நாட்டில் உள்ள சட்ட படிப்பின் முதல் பாடமாக உள்ளது. அனைத்து நடைமுறைகளிலும் நேர்மை இருக்க வேண்டும். அதற்கு எதிர் தரப்புக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த வழக்கில் தன்னை இருவர் தொடர்புகொண்டு பேசியதாக மூத்த நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடும் நிகழ்வு நடந்திருந்தால் உடனடியாக தலைமை நீதிபதிக்கு தெரியப்படுத்தி அதன்படி செயல்பட்டிருக்க வேண்டும்.

தன்னை இருவர் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக கூறிய நிலையில் அந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்த விதமும் பாரபட்சமானதுதான். இந்த சூழலில் அவர் மற்றொரு நீதிபதியின் கருத்தை பரிசீலித்திருக்கலாம். மனுதாரரின் குற்றச்சாட்டு தவறானது என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்து அரசின் உத்தரவு சரிதான் என்று நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதுதான் ேநர்மையான நடவடிக்கையாகும்.

அதே நேரத்தில் ஆட்கொணர்வு மனுக்களை விரைவில் முடிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆட்கொணர்வு மனுக்களை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலிக்கும் நேரம் வந்துள்ளது. எனவே, அரசு தரப்புக்கு 4 வாரங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையடையாத உத்தரவாகும்.

எனவே, அரசு தரப்புக்கு உரிய வாய்ப்பு தராமல் பிறப்பிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு சரியானதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இந்த ஆட்கொணர்வு மனுவை புதிய நீதிபதிகள் அமர்வு விசாரித்து அரசு தரப்புக்கு உரிய வாய்ப்பு தந்து முடிவுக்கு வரவேண்டும். வழக்கை வரும் 12ம் தேதிக்கு (நாளை) பட்டியலிட வேண்டும் என்று பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

The post நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அவசர உத்தரவு ஆவணப்பிழையாகும் அரசு தரப்புக்கு வாய்ப்பு தராததும் பாரபட்சம்தான்: யூடியூபர் சங்கர் வழக்கில் 3வது நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Tags : Justice ,GR Swaminathan ,YouTuber ,Shankar ,CHENNAI ,Judge ,Jayachandran ,High Court ,PP Balaji ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி...