×

மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சனை விஸ்வரூபம் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது

* சமூக வலைத்தளத்தில் மாறி மாறி கருத்து போர், யார் மாநில தலைவராக இருந்த போது கட்சி வளர்ந்தது என விவாதம்

சென்னை: மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த மோதல் தற்போது அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் இடையே பூதாகரமாக வெடித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு மோதி வருகின்றனர். யார் மாநில தலைவராக இருந்த போது கட்சி வளர்ந்தது என்று விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பாஜ நேரடியாக களம் கண்டது.

பாஜ போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி தான் கிடைத்தது. 11 இடங்களில் டெபாசிட் இழந்தது. நாகையில் 4வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. தேர்தல் தோல்வி அடைந்ததும் பாஜவில் மோதல் போக்கு உருவானது. மோதலுக்கு முன்னாள் பாஜதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தார். மக்களவை தேர்தலில் பாஜ தோல்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 20 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் ஒரு கருத்தை தெரிவித்தார். மேலும் அண்ணாமலையின் ஐடி விங் என்னை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபரித முடிவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து இருந்தார். தமிழிசையின் கருத்துக்கு ஆதரவாக பாஜமூத்த நிர்வாகி கல்யாண ராமனும் கருத்தை பதிவிட்டார். அவர் கோவை தொகுதியில், ‘‘அண்ணாமலை பெற்ற வாக்கு சதவீதம் தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை வாக்கு சதவீதத்தை தவறாக கூறி, தோல்வியை திசை திருப்பி வருகிறார்’’ என்று பதிவிட்டார். இதையடுத்து பாஜவில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்க தொடங்கினர். இப்போது சமூக வலைத்தளம் மோதல் தான் பாஜவில் ‘ஹாட் டாப்பிக்’காக வலம் வர தொடங்கியுள்ளது. அதாவது, பாஜதலைவர் அண்ணாமலையின் ஆதரவாளராக கருதப்படும் திருச்சி சிவா, தமிழிசையை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார்.

அதில், ‘பாஜ தலைவராக எல்.முருகன் இருந்த போது, உங்களுடைய பரிந்துரையின் பேரில் குற்றப்பின்னணி கொண்ட பலர் கட்சியில் சேர்க்கப்பட்டார்கள். அது தொடர்பாக ஒரு பட்டியலை தர முடியும். அண்ணாமலையின் வளர்ச்சியைக் கண்டு தமிழிசைக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். நீங்கள் தலைவராக இருந்தபோது தமிழக பாஜவில் யாருமே வந்து சேரவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் கல்யாணராமனுக்கு பதில் அளித்து அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘தமிழக பாஜவுக்கு தமிழிசை செய்த தொண்டு பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை’ என்று பதில் கொடுத்துள்ளனர். இப்படி தமிழக பாஜவில் கருத்து மோதல்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனால், இதுவரை தமிழகத்தில் பாஜவுக்கு ஏற்பட்ட தோல்வி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் ஒரு தரப்பில் இருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது. தற்போது தான் ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்றுள்ளது. தொடர்ந்து இந்த மாதத்தில் படுதோல்வி அடைந்த மாநிலங்களில் தொடர்பாக டெல்லி மேலிடம் ஆலோசிக்கும். அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலையை டிஸ்மிஸ் செய்யுமா அல்லது புதிய தலைவரை நியமிக்குமா என்பது தெரியவரும்.

The post மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சனை விஸ்வரூபம் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது appeared first on Dinakaran.

Tags : Vishwarupam Annamalai ,Tamilisai ,Lok Sabha ,Chennai ,Lok Sabha elections ,Annamalai ,Viswaroopam Annamalai ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியால் கடும்...