×

நீதிமன்ற காவல் முடிந்ததால் சிசோடியா மார்ச் 20 வரை திகார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி  முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிவடைந்ததை அடுத்து  வரும் மார்ச் 20ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு  நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக  விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும்  தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது.

இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக  இரண்டு முறை வரவழைத்தனர். இரண்டாவது முறையாக கடந்த மாதம்  26ம் தேதியன்று  விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான சிசோடியாவை அன்று இரவு கைது  செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் சிபிஐ  காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
சிபிஐ  காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற  நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது மேற்கொண்டு  சிபிஐ காவலை அதிகாரிகள் கோராததால் மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட்டார். மேலும், சிசோடியா விடுத்த கோரிக்கையை ஏற்று பகவத்  கீதை, கண்ணாடிகள், மருந்து போன்றவற்றை சிறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி  வழங்கியதோடு, சிறையில் விபாசனா தியானம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற  அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி  உத்தரவிட்டார். இதையடுத்து சிசோடியா திகார் சிறை எண் 1ல் அடைக்கப்பட்டார்.

Tags : Sisodia ,Tihar , Court Custody, Sisodia, Tihar Jail
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்