புதுடெல்லி: ‘பிற கட்சிகள் எதுவுமே இருக்கக் கூடாது என்றுதான் பாஜவும், காங்கிரசும் விரும்புகின்றன’ என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி ஆம் ஆத்மி உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன. இதில் காங்கிரஸ் இடம் பெறவில்லை. இது காங்கிரசும், ஆம் ஆத்மியும் எப்போதும் ஒன்றாக இருக்காது என்பதற்கான அறிகுறியா என்ற கேள்விக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கட்சியுடன் நின்றதில்லை. தேசிய பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பும்போதெல்லாம், காங்கிரஸ் காணாமல் போகிறது. அவர்கள் இன்றும் காணாமல் போயிருக்கிறார்கள். பாஜவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு மக்களை முட்டாளக்குவதுதான் காங்கிரசின் வேலை. தங்களைத் தவிர மற்ற எந்த கட்சியும் இருக்கக் கூடாது என்பதைத்தான் பாஜவும், காங்கிரசும் விரும்புகின்றன’’ என்றார்.
