×

ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல் எதிரி சொத்துக்களை விற்று ரூ.3,400 கோடி பணமாக்கல்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள எதிரி சொத்துக்களை விற்று ரூ.3,400 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றவர்களின் சொத்துக்கள், 1965,  1971 மற்றும் 1962ல் நடந்த போர்களுக்குப் பின்னர் பாகிஸ்தான, சீனாவுக்குச் சென்ற மக்களும் விட்டுச்சென்ற சொத்துக்கள் எதிரி சொத்துக்களாக குறிப்பிடப்படுகின்றன. எதிரி சொத்துக்கள் சட்டத்தின் மூலம் இந்த சொத்துக்கள் பராமரிக்கப்பட்டும், விற்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், தற்போது ரூ.3,400 கோடிக்கும் அதிகமான அசையும் எதிரி சொத்துக்கள் பணமாக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2018-19, 2019-20, 2020-21, 2021-22ம் நிதியாண்டில் 152 நிறுவனங்களில் இருந்த எதிரிகளுக்கு சொந்தமான 7.52 கோடி பங்குகள் ரூ.2,708.9 கோடிக்கு விற்று பணமாக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய் செலவீனமாக ரூ.699.08 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் எதிரிகளின் ரூ.49 லட்சம் மதிப்பிலான 1699.79 கிராம் தங்கமும், ரூ.10.9 லட்சம் மதிப்பிலான 28,896 கிலோ வெள்ளி ஆபரணங்களும் பணமாக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இதுவரை எதிரிகளின் அசையா சொத்துக்கள் எதையும் ஒன்றிய அரசு பணமாக்கவில்லை. தற்போது, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் எதிரிகளுக்கு சொந்தமாக 6,255 கட்டிடங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் 4,088, டெல்லியில் 659, கோவாவில் 295, மகாராஷ்டிராவில் 208, தெலங்கானாவில் 158, குஜராத்தில் 151, திரிபுராவில் 105, பீகாரில் 94, மத்தியபிரதேசத்தில் 94, சட்டீஸ்கரில் 78, அரியானாவில் 71, கேரளாவில் 71, உத்தராண்ட்டில் 69, தமிழ்நாட்டில் 67, மேகாலயாவில் 57, அசாமில் 29, கர்நாடகாவில் 24 எதிரி சொத்துகள் உட்பட 12,611 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Ministry of Home Affairs , Union Ministry of Home Affairs to sell off enemy assets and monetize Rs 3,400 crore
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...