ஜெய்ப்பூர்: ‘பழிவாங்கும் நோக்கத்திற்காக அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படவில்லை’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி ஊழல் மற்றும் பண மோசடி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரது வீடுகளில் நேற்று ஒரே நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் எதையும் ஒரே இரவில் செய்து விடுவதில்லை. முதலில் தகவல்களை சேகரிக்கின்றனர். முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகே நடவடிக்கையில் இறங்குகின்றனர். எனவே எந்த அமலாக்கத்துறை சோதனையும் பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி நீதிமன்ற பெயிலில் இருக்கும் சில தலைவர்கள் பழிவாங்கும் அரசியல் பற்றி பேசுவது விந்தையானது. ஊழலை பற்றி காங்கிரஸ் பேசவே கூடாது. அது அசிங்கம். ஊழல் தொடர்பான பிரச்னைகளில் சிக்கியதால்தான் காங்கிரஸ் கட்சி ஒன்றன் பின் ஒன்றாக பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ள சில மாநில அரசுகள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்துள்ள மாநில அரசு ஊழியர்களின் பணத்தை திருப்பி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றன.
இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதாக கூறுகின்றன. இந்த விஷயத்தில் சட்டப்படி, மாநில அரசுகளிடம் தருவதற்கான சாத்தியம் இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் தொடர்ந்து அரசு கவனம் செலுத்தும். குறிப்பாக பருப்பு வகைகளை பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பருப்பு வகைகள் விளைச்சல் அதிகரிக்கும். அனைத்து வகை பருப்புக்கான இறக்குமதி வரி ஒற்றை இலக்கத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முழுமையாகவும் வரி நீக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக சமையல் எண்ணெய் இறக்குமதி வரி கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
