வாஷிங்டன்: அதிபராக நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான உடல்நலம், துடிப்புடன் அதிபர் பைடன் இருப்பதாக அவரது தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் 2024ம் ஆண்டில் புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சிகளிடையே அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. குடியரசு கட்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே களத்தில் இறங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் முன்னாள் அதிபர் டிரம்பிற்கும் அவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் பைடன் ஆண்டு தோறும் செய்து கொள்ளும் மருத்துவ பரிசோதனையை வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று மேற்கொண்டார். பரிசோதனைக்கு பின் பைடனின் தலைமை மருத்துவர் கெவின் சி ஓ’கார்னர், ``அதிபராக நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய தேவையான முழு உடல்நலம் மற்றும் துடிப்புடன் அதிபர் பைடன் இருக்கிறார்,’’ என்று தெரிவித்தார். இதன் மூலம், அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் பங்கேற்க அதிபர் பைடன் உடல்நலத்துடன் இருப்பது உறுதியாகி உள்ளது. இது ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் போட்டியில் இருக்கும் பைடனுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.