சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதியில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை முன்னிட்டு ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-103 அலுவலகத்தில் நேற்று நடந்த கொசு ஒழிப்புப் பணியாளர் வருகையை பார்வையிட்டு, கொசு ஒழிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அறிவுரைகளை வழங்கி, இப்பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் குடியிருப்பு பகுதியில் கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து வார்டு-105ல் 100அடி சாலைப் பகுதியில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் கொசுப்புழுக்கள் அடர்த்தியை ஆய்வு செய்தும், டிரோன் மூலம் கொசுப் புழுக்கள் நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வுகளில், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், அண்ணாநகர் மண்டல குழு தலைவர் ஜெயின், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பலதா, அதியமான் மற்றும் மண்டல அலுவலர், மாநகர நல அலுவலர், தலைமை பூச்சியியல் தடுப்பு அலுவலர் உள்பட பலர் உடனிருந்தனர்.