×

அதிமுக ஆட்சியில் ஆயிரம்விளக்கில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட 1,036 காவலர் குடியிருப்புக்கு ஆபத்து?: கை வைத்தாலே சிமென்ட் உதிர்ந்து விழுவது போல் பரவும் வீடியோ

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள 1036 காவலர் குடியிருப்பு தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக வீடியோ பதிவுகளுடன் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கட்டிடம் கட்டிய ஈரோடு பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு, ஆயிரம்விளக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த காவலர் குடியிருப்பு கட்ட ஈரோடு பகுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்தது. இந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக ராமலிங்கம் என்பவர் உள்ளார்.

கட்டுமான ஒப்பந்தத்தை எடுத்த தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.180.50 கோடிக்கு 1036 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டியது. கடந்த 2018-19ம் ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நடந்தது. பிறகு ஒப்பந்தப்படி அதிநவீன வசதிகளுடன் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதிமுக ஆட்சி காவலத்தில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், திமுக ஆட்சியில் மின்வசதி, பெயின்ட், குடிநீர் இணைப்பு மட்டும் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, அனைத்து கட்டுமான பணிகளும் அதிமுக ஆட்சி காலத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. 1036 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடமானது, கடந்த ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குடியிருப்பு தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக, குடியிருப்பில் வசிக்கும் காவலர் ஒருவர், தனது வீட்டில் உள்ள சுவர்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்ததாகவும், கை வைத்தாலே சிமென்ட் அனைத்தும் உதிர்ந்து விழுவது போன்று வீடியோ காட்சிகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த வீடியோ ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 1036 காவலர் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதைதொடர்ந்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம், அதிமுக ஆட்சியில் ரூ.180.50 கோடியில் 1036 வீடுகள் கட்ட ஒப்பந்தம் எடுத்த ஈரோடு கட்டுமான நிறுவனத்தின் மீது, கட்டிடத்தின் தரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், புகார் எழுந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தன்மை குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட காவலர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் சிமென்ட் உதிர்ந்து விழும் சம்பவத்தால் அங்கு குடியிருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் குடும்பத்தினர் பதற்றம் அடைந்துள்ளனர்.

Tags : 1,036 police quarters built in substandard condition under AIADMK rule, danger?: Video circulating as if cement falls off at the touch of a hand
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...