×

17 டிஎஸ்பிக்கள், 444 எஸ்ஐக்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மாநிலத்தின், அமைதியை பேணி பாதுகாத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்களின் மேம்பாட்டிற்காக இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் பல்வேறு போட்டி தேர்வுகளில் பெண்கள் அதிக அளவில் தேர்வு பெற்று அதிகாரம் மிக்க பதவிகளை பெற்று வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 பேர்களில், 13 பெண் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அதேபோன்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால்  காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 311 ஆண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 133 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 444 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வழங்கினார். பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு 1.3.2023  முதல் வண்டலூர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அகர்வால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin , Appointment order for 17 DSPs, 444 SIs: Chief Minister M. K. Stalin issued
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு