×
Saravana Stores

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காதல் திருமணம் செய்த பெண் ஐகோர்ட் கிளையில் ஆஜர்

மதுரை: பெற்றோர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காதல் திருமணம் செய்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா, இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் நேரில் ஆஜரானார். தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இலஞ்சியைச் சேர்ந்த கிருத்திகா பட்டேல் என்பவரை காதலித்தேன். அவரது சம்மதத்துடன் எனது வீட்டிற்கு வந்தார். எனது பெற்றோர் முன்னிலையில் அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் கடந்த 25ம் தேதி அவரது பெற்றோர், என்னை தாக்கி விட்டு கிருத்திகாவை கடத்திச் சென்று விட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கிருத்திகாவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிருத்திகாவை மீட்டு, ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் வழக்கறிஞர் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, ‘மனுதாரர் புகாரின் மீது 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகிறோம். கடத்தப்பட்ட பெண்ணை மீட்பது சம்பந்தமாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் குஜராத் சென்று தேடி வருகின்றனர்’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை போலீசார் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் ஆகியோர் இன்று ஐகோர்ட் கிளையில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா பட்டேல், அரசு கூடுதல் வக்கீல் மீனாட்சிசுந்தரம் முன்னிலையில், ஐகோர்ட் கிளையில், நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.


Tags : Ajar ,Ikort , Reportedly abducted love-married woman in Tenkasi appears in court branch
× RELATED ராஜிவ் காந்தி குறித்து அவதூறு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்