×

பாகிஸ்தானும், இந்தியாவும் 2019ல் அணுஆயுத போருக்கு தயாராக இருந்தன: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் தகவல்

வாஷிங்டன்: பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்த மைக் பாம்பியோ, தனது அனுபவங்கள் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போரை நடத்த இருந்த விவகாரம் உலகிற்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், இந்த இரு நாடுகளும் அணுஆயுத போருக்கு நெருங்கின. அது எனக்கு நன்கு தெரியும். அப்போது நான் வியட்னாமின் ஹனோய் நகரில் இருந்தேன். பாகிஸ்தானின் தளர்வான பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை காரணமாக 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவ விமானத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதில், இந்திய விமானி பிடிபட்டார். உடனடியாக நான் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் (சுஷ்மா ஸ்வராஜ்) பேசினேன்.

அப்போது அவர், இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், எனவே, இந்தியா தனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். அப்போது நான், எதையும் செய்துவிடாதீர்கள்; எனக்கு ஒரு நிமிடம் மட்டும் தாருங்கள் என்று கூறிவிட்டு, உடனடியாக பாகிஸ்தானின் உண்மையான தலைவராக இருந்த கமர் ஜாவெத் (ராணுவ தலைமை தளபதி) இடம் பேசினேன். இந்திய வெளியறவு அமைச்சர் கூறியதை அவரிடம் தெரிவித்தேன்.

அப்போது அவர் அது உண்மை அல்ல என தெரிவித்தார். அதோடு, இந்தியாதான் பாகிஸ்தான் மீது அணுஆயுத போரை நடத்த தயாராகி வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இரு நாடுகளுமே மற்றொரு நாட்டுக்கு எதிராக அணுஆயுத போரை நடத்தும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதை புரிய வைக்க எனக்கு சில மணி நேரம் தேவைப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Pakistan ,India ,US ,foreign minister , Pakistan, India ready for nuclear war in 2019: Former US Secretary of State
× RELATED வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது;...