×

வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை:  வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை இந்தாண்டு டிசம்பர் இறுதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய விதிமுறைகள் 2021ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டன. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தி 2023 ஜனவரி 1ம் தேதிக்குள் திருத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதுவரை திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது ரிசர்வ் வங்கி கவனத்திற்கு வந்துள்ளது. எனவே விதிமுறைகளை புதுப்பித்தல் செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்குள் படிப்படியாக வங்கிகள் புதிய விதிமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஏப்ரல் 30க்குள் திருத்தப்பட்ட விதிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரியப்படுத்தி, ஜூன் 30 மற்றும் செப்டம்பர் 30க்குள் முறையே 50 மற்றும் 75 சதவீத வாடிக்கையாளர்களை புதிய விதிமுறைக்கு இணங்கச் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.


Tags : RBI , Bank locker new deal extended till December: RBI notice
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!