×

வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலர் சஸ்பெண்ட்: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதிய நிலையில்,  கூட்டமைப்பின் துணை செயலாளரை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கூட்டமைப்பினர் சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாகவும், நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்ஜை பதவியிலிருந்து நீக்க கோரி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டம் நடத்திய வீரர், வீராங்கனைகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேற்பார்வைக் குழு ஒன்றை அமைப்பதாகவும், விசாரணை முடியும் வரை கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்று, வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு, ஒன்றிய விளையாட்டு அமைச்சகத்திற்கு நேற்று விளக்க கடிதம் எழுதியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அரசிலயமைப்பின் தேர்தெடுக்கப்பட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே தலைவர் உட்பட யாருமே தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் கூட்டமைப்பில் பாலியல் வன்கொடுமைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அந்த குழுவில் புகார் கூறியிருக்கலாம். ஆனால் எந்த வீராங்கனைகளிடம் இருந்து அப்படிப்பட்ட புகார் எதுவும் வரவில்லை.

எனவே, கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எதிராக தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ரகசிய சதி திட்டத்தின் கீழும் இந்த குற்றச்சாட்டுகள் தூண்டப்பட்டுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை. புகார் கூறுபவர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். விரைவில் கூட்டமைப்பு தேர்தல் நடக்க உள்ள நிலையில் இப்படிப்பட்ட புகார் எழுப்பியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசின் விசாரணைக்கு கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பும் வழங்க தயாராக உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடிதம் கிடைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் தோமரை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.


Tags : Wrestling federation ,deputy secretary ,Union Govt. , Wrestling federation's deputy secretary suspended in women's sex allegations case: Union Govt
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...