துபாய்: ஈரானில் ராணுவ படையை சேர்ந்த இரண்டு பேரை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 பேர் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலின்போது மரணமடைந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அங்கு ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. போராட்டக்காரர்கள் 517 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 19,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் தொடர்புைடைய குற்றச்சாட்டின் பேரில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பேர் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 3ம் தேதி ராணுவ படையின் தன்னார்வலர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் முகமது காராமி மற்றும் முகமது ஹூசைனி ஆகியோர் தூக்கிலிப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை 4 பேர் தூக்கிலிப்பட்டுள்ளனர்.