திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, ‘டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பக்தர்கள் வழக்கம்போல் வரலாம்’ என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, தேவஸ்தான இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம்தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த 11 நாட்களும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேரை தரிசனம் செய்து வைக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கான இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் வரும் 1ம் தேதி முதல் தினமும் 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தரிசனத்துக்கு வருபவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும்’ என தேவஸ்தான இணையத்தில் அறிவிப்பு வெளியானது.
ஆனால், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உட்பட கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தவறுதலாக இணையத்தில் வெளியாகி விட்டதாக திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி ரவி தெரிவித்தார். கொரோனா நிபந்தனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு வரலாம் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வைகுண்ட வாயில் தரிசனத்துக்கு ரூ.300 டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி சர்வதர்ஷன்(இலவச) டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். சர்வ தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கிருஷ்ணதேஜா ஓய்வு இல்லத்தில் தரிசன நேரத்திற்கு வர வேண்டும். தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படும். எனவே, தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக திருமலைக்கு வர வேண்டும்’ என்றார்.
* ஸ்ரீகாளஹஸ்திக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த தொட்டம்பேடு மண்டல தாசில்தார் சுப்ரமணியம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னை போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
