புதுடெல்லி: கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் பி.வைரமுத்து, நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது. அதனால் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விளக்கம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அதிமுகவை பொருத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்றத்தை எடப்பாடி பழனிச்சாமி தவறாக வழி நடத்த முற்படுகிறார். எனவே எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போழுது எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மற்றும் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள விளக்க மனு ஆகியவை குறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
