×

கொலை செய்ததை ஒப்புக் கொண்டு பொதுமக்களிடம் நளினி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசியா டெய்சி எர்னஸ்ட் பேட்டி

சென்னை: கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, நளினி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜிவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்தவருமான ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி அனுசியா டெய்சி எர்னஸ்ட் கூறினார். இதுகுறித்து முன்னாள் காவல்துறை அதிகாரி (காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர்) ராஜிவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பு பணியில் இருந்தவருமான அனுசியா டெய்சி எர்னஸ்ட், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ராஜிவ் காந்தி படுகொலையின்போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன்.

அந்த குண்டுவெடிப்பில் நானும் பாதிக்கப்பட்டேன் என் விரல்கள் துண்டிக்கப்பட்டது, உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுப் பாதிப்புக்குள்ளானேன். குற்றவாளிகளை நேரில் பார்த்தது நான் அடையாளம் காட்டினேன். அதனால், நளினி உள்ளிட்ட 6 பேர் தூக்கு தண்டனை பெற்றனர். அதன் பின்னர், அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 31 ஆண்டுகள் சிறையில் இருந்த குற்றவாளிகள், தங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்கள் மூலம் விடுதலையாகி உள்ளனர். நளினி என்னை பார்த்ததே இல்லை என கூறியுள்ளார். அது பொய். நான் அளித்த சாட்சியை வைத்து மட்டும் நளினியை கைது செய்யவில்லை. தண்டனை தரவில்லை.

 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளை வைத்து தான் தண்டனை கொடுத்தனர். அப்போது தண்டனை கொடுத்த நீதிபதிகள் தவறானவர்களா. நான் பொய் சாட்சி என்றால் அப்பொழுது நீதிமன்றம் பொய் சாட்சிகளை வைத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டதா. குண்டுவெடிப்பின்போது நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லை, இந்திராகாந்தி சிலை அருகில் தான் இருந்தேன் என்று பொய்யாக நளினி தெரிவித்து வருகிறார்.

 ஆனால் அப்பொழுது  வந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் நளினி இருப்பது தெரிய வருகிறது. முருகன் என்பவர் விடுதலைப் புலிகளை சேர்ந்தவர். அப்படி என்றால் விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் நளினியா. முருகன் விடுதலைப் புலிகளை சேர்ந்தவர் என்றால் அதன் கொள்கைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது.  பொய் மேல் பொய் சொல்லி வருகிறார் நளினி. அவர் விடுதலையாகி வெளியில் வரும் பொழுது  பூ வைத்து வருகிறார். ஆனால் அவர்களால் எத்தனை பேர் பூ இழந்துள்ளனர். நளினி ஒரு  துரோகி, கொலைகாரி.
 தற்போதாவது நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு இந்திய மற்றும் தமிழக மக்களிடையே நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


Tags : Nalini ,Anusia Daisy Ernest , Murder, Nalini, Forgiveness, Retired ATSP, Anusia Daisy Ernst, Interview
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...