×

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 2022ல் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால், தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நளினியின் கணவர் முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில்,லண்டன் செல்ல அடையாள அட்டை வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. 3 பேரும் ஒன்றிய அரசு அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 3 பேரும் திருச்சியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். தனி கவுண்டரில் விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்தது. அங்கு வேறு பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானதும், அதிகாரிகள் 3 பேரையும் விமானத்தில் ஏற்றினர். அவர்களோடு, வழக்கறிஞர் ஒருவரும் சென்றார். அந்த விமானம் காலை 10.05 மணிக்கு இலங்கை புறப்பட்டு சென்றது. முன்னதாக கணவர் முருகனை வழியனுப்ப, நளினி மற்றும் அவரது உறவினர்கள் வந்திருந்தனர்.

The post ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : MURUGAN ,JAYAKUMAR ,ROBERT BAYAS ,SRI LANKA ,Chennai ,Shandan ,Nalini ,Ravichandran ,Rajivganti ,Supreme Court ,Perariwalan ,Dinakaran ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்