கொடைக்கானல் : கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சுற்றுலா புத்துணர்ச்சி பெற்று வரும் நிலையில், ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 70 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.2019 ஆண்டு துவங்கிய கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பல நாடுகளும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. கொரோனா இக்கட்டு நீங்கியப் பிறகும் கூட சுற்றுலாத் தொழிலில் பெரும் பாதிப்பு தொடர்ந்தது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுவதும் பறிகொடுத்தனர். தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய கொடைக்கானலை பொருத்தவரையில் கொரோனா காலகட்டம் இங்கிருக்கும் மக்களை ரொம்பவே புரட்டி போட்டது.
கொடைக்கானலில் முக்கிய தொழிலாக இருப்பதே சுற்றுலா தான். சுற்றுலாத்துறை முழுவதுமாகவே முடக்கப்பட்டதால் இந்தத் தொழிலை நம்பி இருந்தவர்கள் பலரும் ஊரை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை ஏற்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த உடன் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டாலும் ஆரம்பகட்டத்தில் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனையே கொடைக்கானலுக்கு வந்து சென்றனர். இதனால் ஒரு தேக்க நிலை தொடர்ந்து இருந்தது வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலாத் தொழில் இங்கு புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது.
கொரோனா காலகட்டத்திற்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் பேர் என இருந்தது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு 81 லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டை பொருத்தவரையில் தற்போது வரை கொடைக்கானலுக்கு 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர். இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறைகளில் தான் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் காணப்படும். தற்போது வாரம் முழுக்கவே சுற்றுலா பயணிகள் வருகை சராசரியாக அதிகரித்து இருக்கிறது.வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லக் கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்து அவர்களும் கூட உள்நாட்டில் இருக்கக்கூடிய உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு அதிக விருப்பத்துடன் வந்து செல்கிறார்கள்.இதற்குக் காரணம் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதுதான்.
மேலும், பாதுகாப்பும் காரணமாக கூறப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும்,விண்ண முட்டும் மரங்களும், மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளின் அழகும் என ரசிப்பதற்கான ஏகப்பட்ட இயற்கை அழகு கொஞ்சும் விஷயங்கள் இருப்பதால், கொடைக்கானலுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மக்கள் கூறும்போது, ‘‘சுற்றுலாப் பயணிகளின் கூடுதல் வருகை தற்போது கொடைக்கானல் நகர் பகுதிக்குள் மட்டுமல்லாது, கொடைக்கானலை சுற்றிய பல்வேறு கிராம பகுதிகளிலும் மக்கள் வாழ்விலும் மலர்ச்சியை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நகர்பகுதியை மட்டுமே சுற்றுலாப்பயணிகள் பார்த்துச் செல்லாது, சுற்றிய கிராமப்பகுதிகளுக்கும் படையெடுக்கின்றனர். இதனால் அவர்களது வசதிகள், உணவுகள் போன்றவைகள் மூலம் கிராமப் பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது’’ என்றனர்.
நெரிசல் நீங்குமா?
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், இவர்கள் சந்திக்கும் போக்குவரத்து நெரிசல், கார் நிறுத்துமிடம், தங்குமிடம் மற்றும் உணவு விடுதிகளின் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளும் தொடர்கிறது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கேற்ப அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை கூடுதல் கவனம் காட்டி வருகிறது.
அரசு சார்பில் தங்குமிடம், அடிப்படை வசதிகள், வழிகாட்டுதல்கள், சுற்றுலா பகுதிகளில் வசதிகள் என முன்பை விட இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் காட்டப்படுகிறது. நெரிசலுக்கு விடைகொடுக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு உற்ற தோழனாக தமிழக சுற்றுலாத்துறை செயல்பட்டு வருகிறது’’ என்றார்.
