×

கட்டிடங்களை துல்லியமாக அளவீடு செய்ய லேசர் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கருவிகள்; வருவாய் அலுவலர்களுக்கு மேயர் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டிடங்களை துல்லியமாக அளவீடு செய்ய நவீன லேசர் தொழில் நுட்பம் கொண்ட கையடக்க டிஜிட்டல் கருவிகளை வருவாய் அலுவலலர்களுக்கு மேயர் பிரியா வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்துவரி கணக்கீடு செய்யும் போது, கட்டிடங்களின் பரப்பளவை எளிதில் அளவீடு எடுக்கும் வகையில் கையடக்க நவீன டிஜிட்டல் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. இதை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், மேயர் பிரியா கலந்து கொண்டு, இந்த கையடக்க நவீன டிஜிட்டல் கருவிகளை சென்ைன மாநகராட்சி மண்டலங்களில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மண்டல உதவி வருவாய் அலுவலர்களுக்கு வழங்கினார். அப்போது மேயர் பிரியா கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் கட்டிடங்களுக்கு வருவாய்த் துறையின் மூலமாக சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கட்டிடங்களை அளவீடு செய்வதற்கு அளவு நாடா மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  

தற்போது சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் பரப்பளவை அளவீடு செய்ய ஏதுவாக நவீன லேசர் தொழில் நுட்பத்தைக் கொண்ட டிஜிட்டல் கையடக்க அளவீட்டுக் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக 15 மண்டலங்களுக்கும் தலா ஒன்று எனவும், வருவாய்த்துறை தலைமையிடத்திற்கு ஒன்று எனவும் மொத்தம் 16 டிஜிட்டல் கையடக்க அளவீட்டுக் கருவிகள் ரூ.6 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு, 200 வார்டுகளுக்கும் இக்கையடக்க அளவீட்டுக் கருவி வழங்கப்படவுள்ளது. இக்கையடக்க அளவீட்டுக் கருவியை பயன்படுத்துவதால் குறைந்த நேரத்தில் அதிகப்படியான கட்டிடங்களை துல்லியமாக அளவீடு செய்ய இயலும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்ைன மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் விஷூ மஹாஜன், மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு மற்றும் உதவி வருவாய் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayer , Digital tools in laser technology to accurately measure buildings; Mayor presented to Revenue Officers
× RELATED காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 383...