×

நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 15: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மகளிருக்கென தனியாக ஒரு கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 1969ம் ஆண்டு அங்கு இயங்கி வந்த கல்லூரியை மகளிர் கல்லூரியாகவும், (காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி), அதிலிருந்து பிரிக்கப்பட்ட கல்லூரியை, நந்தனம் பகுதியில் ஆடவருக்கென தனியாகவும் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கல்லூரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தற்போது சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் அரசு இருபாலர் கல்லூரிகள் துவங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருவதால், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிக்கு இப்பகுதிகளிலிருந்து இளநிலை பாடப்பிரிவில் சேருவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இளநிலை வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.

எனவே, 2024-25ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், அப்பகுதி மாணவிகள் பெருமளவில் பயனடையும் வகையிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்ட வகுப்புகளில் மாணவிகள் அதிக அளவில் சேர்க்கை பெற்று பயின்று வருவதன் அடிப்படையிலும், கல்லூரி ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி, அக்கல்லூரியின் பெயரை ‘அரசு கலைக்கல்லூரி, நந்தனம்’ என பெயர் மாற்றம் செய்து ஆணை வழங்குமாறு நந்தனம், அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் கோரியுள்ளார். இதை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியை 2024-25ம் கல்வியாண்டு முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்தும், அக்கல்லூரியின் பெயரை ‘அரசு கலைக் கல்லூரி, நந்தனம்’ என பெயர் மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

The post நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nandanam Men's Arts College ,Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu government ,Nandanam Government Men's Arts College ,
× RELATED உண்மைக்கு புறம்பான செய்தி...