×

காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 383 பேருக்கு சத்து மாவு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் காசநோய் தொற்று எளிதில் தாக்கும்: சத்தான உணவு பொருட்களை சாப்பிட மேயர் அறிவுரை

சென்னை: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காசநோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திடும் வகையில், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் 383 காசநோயாளிகளுக்கு தலா 500 கிராம் சத்துமாவு பாக்கெட்டுகளை மேயர் பிரியா நேற்று தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரமான காசநோய் கண்டறிதல் சேவை மற்றும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன. இத்திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காசநோய் ஒழிப்பு திட்டத்தின் பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் தன்னார்வ தொண்டர்கள் காசநோய் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2023ம் ஆண்டு 3,70,258 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு, 11,273 காசநோயாளிகள் மாநகராட்சியின் மூலமாக கண்டறியப்பட்டனர்.

மேலும், 4,553 காசநோயாளிகள் தனியார் துறையிலும் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களை காசநோய் தொற்று எளிதில் தாக்கும். மேலும், காசநோய் தொற்று உடையவர்கள் பசியின்மை காரணமாக சரிவர உணவு உட்கொள்ள இயலாது. இதனால், அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளுடன் சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் காசநோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும். ஆகையால் காசநோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திட “நிக்‌ஷய் போஷன் யோஜனா” எனும் திட்டத்தின் கீழ் அவர்களின் சிகிச்சை காலம் முழுவதும் மாதந்தோறும் ரூ.500 அவர்களது வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து நன்கொடை வரவேற்கப்படுகிறது. இதுவரை 17 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் 160 தனிநபர்கள் மூலம் 850 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 383 பேருக்கு சத்து மாவு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் காசநோய் தொற்று எளிதில் தாக்கும்: சத்தான உணவு பொருட்களை சாப்பிட மேயர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Mayer ,Chennai ,Chennai Corporation ,Mayor ,Priya ,Thandaiyarpet Epidemic Hospital ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...