×

2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, ஜூன் 15: வருகிற 28ம் தேதிக்குள் 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.அனுசுயாதேவி வெளியிட்ட அறிவிப்பு: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள், வரும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், ஒன்றிய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருத்தல் வேண்டும். இந்த விருது உயர்ந்த தரநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும்.

பத்ம விருதுகள் நாட்டிலேயே இரண்டாவது உயரியவிருதாக இருப்பதால், இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மாநில விருதோ பெற்றிருக்க வேண்டும். இந்த விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த விருதிற்கு பரிந்துரை செய்யப்படும். சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கபடுவதில்லை. இருந்தபோதும் மிக தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒருவருடத்திற்குள் இறந்திருந்ததால் அவர்கள் இந்த விருதிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

இந்த விருதிற்கு விண்ணபிப்பவர்கள் ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இந்த விருது பெற்ற நாளிலிருந்து 5 வருடத்திற்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும். இருந்த போதிலும் மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு கால கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும். அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இநத் தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு இணையதள முறை மூலமே விண்ணபிக்க வேண்டும். awards.gov.in, padmaawards.gov.in மூலம் விண்ணப்பித்தும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (3 நகல்கள்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேருபூங்கா, சென்னை-84. எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்பிக்க வேண்டும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28.06.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Padma Awards ,Chennai ,Chennai District ,A. Anusuyadevi ,
× RELATED ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி,...