லண்டன்: இங்கிலாந்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ், தவறான நிர்வாக கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், லிஸ் டிரசை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகிய மூவர் இடையே போட்டி நிலவுகிறது. இதில், சுனக்குக்கு 128 எம்பிக்களும், போரிஸ் ஜான்சனுக்கு 100 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், இரு தலைவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒருமனதாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். போரிஸ் ஜான்சன் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
