×

ஜமீன் எண்டத்தூர் பகுதியில் லாரி மோதி விவசாயி பலி: கிராம மக்கள் சாலை மறியல்

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீரல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (55). விவசாயி. இவர்  நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஜமீன் எண்டத்தூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஜமீன் எண்டத்தூர் பகுதியில் இயங்கும் கல் குவாரியில் இருந்து கனரக லாரி ஒன்று முருகனுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்தது. அச்சாலை மிகவும் குறுகியிருந்ததால் கனரக லாரியை கடக்க முருகன் தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரம் இயக்கி உள்ளார்.

அப்போது, முருகன் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.  அந்நேரம், சாலையில் சென்ற லாரி முருகன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.  இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகவும் குறுகிய சாலையில் கல்குவாரியில் இருந்து லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், மேலும், குறுகலான ஜமீன் எண்டத்தூர் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அப்பகுதியில் உள்ள குவாரிகளை மூட வேண்டும் இறந்த விவசாயி குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய லாரியை சிறைப்பித்து இறந்தவரின் சடலத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜமீன் எண்டத்தூர் - அம்மனூர்  நெடுஞ்சாலையில் எண்டத்தூர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ததோடு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதனை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்போது சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Zameen Endathur , Farmer killed by truck in Zameen Endathur area: Villagers stage road blockade
× RELATED பறிமுதல் வாகனத்தை பயன்படுத்திய...