×

நம்ம ஊரு வெற்றிலை பாக்கை ஓரங்கட்டும் பீடா; மேற்கத்திய நாடுகளுக்கு இடம் பெயர்ந்த அவலம்

திருச்சி: ``கொட்டபாக்கும் கொழுந்து வெற்றிலையும்’’ என்ற பாடல் வரிகள் நாம் கேட்டிருப்போம். தமிழகத்தின் மிக பாரம்பாியமான கலாச்சாரங்களில் ஒன்று அது சுபநிகழ்ச்சியாக இருந்தாலும், துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் மதிய உணவுக்கு பிறகு நிச்சயம் அந்த வீட்டின் வரவேற்பு மேசையில் தாம்புலத்தில் கொட்டை பாக்கும், காம்பு கிள்ளிய வெற்றிலையும், சுண்ணாம்பும், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி வைத்திருப்பார்கள். இன்னும் கொஞ்சம் பணம் படைத்தவா்களாக இருந்தால் வௌ்ளித்தட்டில் வைத்திருப்பார்கள். இந்த வெற்றிலை பாக்கு தாம்பூலம் இந்தியாவில் இருந்து தான் மேற்கத்திய நாடுகளுக்கு பரவியுள்ளது. அவா்கள் இன்றும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இன்று எத்தனை சுப நிகழ்ச்சிகளில் இந்த வெற்றிலை, கொட்டபாக்கு, சுண்ணாம்பு வைக்கும் பழக்கம் உள்ளது என்றால் அது கேள்விக்குறித்தான்?. ஏனென்றால் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாரபட்சம் இல்லாமல் இடம்பெறக்கூடிய இந்த வெற்றிலை ஆரம்பத்தில் கொட்டை பாக்குடன் வைக்கப்பட்டது. அதன்பிறகு சாயப்பாக்கு, சீவல் அதன்பிறகு சற்று இனிப்பு கலந்த பாக்குகள், என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று பீடாவிற்கு வந்து நிற்கிறார்கள். இன்று நாம் எந்த உணவகத்திற்கு சென்றாலும் அங்கு இந்த பீடா வைக்கிறார்கள்.

அதேபோல் உணவகத்தை விட்டு வௌியே வந்தால் முதலில் கண்ணில் தென்படுவது இந்த பீடாகடை தான், ஒரு பெரிய தாம்புலத்தில் 10க்கும் மேற்பட்ட டபாக்களை அடுக்கி வைத்து ஒரு பெரிய குடையின் கீழ் வாயில் பீடாவை மென்றுகொண்டு நிற்பார். ஆனால் எந்த பெட்டிகடையையும் பார்க்க முடிவதில்லை, அப்படியே இருந்தாலும் அங்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு விற்பதில்லை. இன்று எந்த பெட்டிக்கடைக்கு சென்றாலும் அங்கு பீடி, சிகரெட், விற்பனை மட்டும் தான், ஆனால் உடம்புக்கு ஆரோக்கியமாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு விற்பதில்லை. தமிழகத்தின் கலாச்சாரத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்பது எப்படி முக்கியத்துவம் வகித்ததோ, அதே அளவிற்கு வட மாநிலங்களில் பெரும்பாலும் உணவருந்திய பிறகு ஏதாவது இனிப்பு வகைகளை உண்பது வழக்கமாக கொண்டுள்ளனா். சுப நிகழ்ச்சிகள் என்றால், அங்கு பயன்படுத்தப்படும் வடமாநில வெற்றிலை சற்று அகலம் அதிகம் உள்ளதாகவும், கொஞ்சம் தடிமனான வடிவமைப்பிலும் இருக்கும். இதில் தயாரிக்கப்படும் பீடாக்கள் பலவகை உண்டு, அதில் பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி உள்ளிட்ட பீடா வகைகள் வடமாநிலத்தவரால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக நம்முடைய ஊரில் உற்பத்தியாகும் வெற்றிலையில் 84.4சதவீதம் நீர்ச்சத்தும், 3.1சதவீதம் புரத சத்தும், 0.3சதவீதம் கொழுப்பு சத்தும் உள்ளது. பொதுவாக மனித உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ, அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இது செரிமானத்துக்கு பெரிதும் உதவுகின்றன. அதேபோல் வெற்றிலையுடன் கொட்டை பாக்கை ஏன் சோ்க்கிறார்கள் என்றால், கொட்டை பாக்கில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இவற்றுடன் கொலஸ்ட்ரால் குறைய இந்த கொட்டைபாக்கு பயன்படுத்தப்படுகிறது. கடல் சிப்பிகளில் இருந்து உண்டாக்கப்படும் சுண்ணாம்பு தான் உண்ண தகுந்தவை மருத்துவ குணம் உள்ளது. இந்த சுண்ணாம்பால் கால்சியம், புத்துணா்ச்சி, பெண்களுக்கான கருமுட்டை உருவாக காரணமாக இந்த சுண்ணாம்பு உள்ளது. குழந்தைகளுக்கு தேனில் இந்த சுண்ணாம்பை கலந்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகாிக்கும் என்பதால் தான் இந்த கலாச்சாரத்தை இந்தியாவில் பின்பற்றி வந்தனா். ஆனால் தற்போது எந்த நிகழ்ச்சியிலும் தாம்பூலத்தட்டை பார்க்க முடிவதில்லை. அதற்கு பதிலாக பீடா தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் ஸ்வீட் பீடா என்று சொல்லக்கூடியவற்றில் குங்குமப்பூ, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், உலா்ந்த பழங்கள், தனியா, சோம்பு, வாசனைக்காக நவரத்தின சட்னி, சில்வர், முலாம் பூசிய ஏலக்காய் என்று ஒரு ரக பீடா பணக்காரா்கள் நடத்தும் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் சாதாரண நடுத்தர வா்க்கத்தினா்களின் சுபநிகழ்வுகளில் இடம்பெறும் பீடாவில் வெற்றிலை, சீவல், ஏலக்காய், கிராம்பு, பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், உலா் பழங்கள் மற்றும் தேன் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் பீடாக்கள் தான் தற்போது இடம்பெறுகின்றன.ஆனால் சுபாரி என்று சொல்லக்கூடிய பீடாவானது புகையிலை தூள் மற்றும் பாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகையான போதை தரும் பீடாவானது விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதை அரசு தடைசெய்ததால், அதன் விற்பனை குறைந்துள்ளது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பயன்படுத்தப்பட்டு வந்த காலம் மாறி பீடாவிற்கு பலா் மாறியுள்ளனா். அது தான் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு கடந்த சென்ற வெற்றிலை, பாக்கு கலாச்சாரம் இன்றும் அவா்கள் பின்பற்றக்கூடியதாக உள்ளது. ஆனால் நாம் வடமாநிலங்களில் இருந்து வந்த பீடாவை அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். அதற்கு காரணம் உண்டு, பலருக்கு வெற்றிலை பாக்கு போடுவதை விரும்புவதில்லை. பலருக்கு பீடாவில் உள்ள அந்த இனிப்பு கலந்த கலவையை தான் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விரும்புகிறார்கள். அதில் எத்தனை சுவை இருந்தாலும் அது நம்ம ஊரு வெற்றிலை, பாக்கிற்கு ஈடாகுமா...

Tags : Let our town set aside the betel nut; Woe to moving to western countries
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...