புதுச்சேரி: புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ அமைப்புகள் விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார். இதனால் அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர். புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து உரிமம் பெற்ற, செயல்படாத ஏஜென்சிகள் மூலம் வடமாநிலங்களில் விற்றது தெரியவந்தது. சிபிசிஐடி போலீசார் ராஜா வீட்டில் சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் ரசீதுகள், டைரி, பாஸ்போர்ட், ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இதையடுத்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் குடோன்கள் என 13 இடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா, எந்த இடையூறும் இன்றி போலி மருந்து விற்பனை செய்ய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்களும் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக்ேகாரி பல்வேறு அமைப்புகள் கவர்னர் கைலாஷ்நாதனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாலும் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ மற்றும் என்ஐஏ அமைப்புகள் ேமற்கொள்ள புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பரிந்துரை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் என்ஐஏ அதிகாரிகள், விரைவில் இவ்வழக்கு விசாரணையை துவங்க உள்ளனர். இதனால் போலி மருந்து விற்பனையில் ஆதாயம் அடைந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
