×

மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம்; தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு: அரசியல் செய்தவர்களுக்கு விழுந்தது அடி

மதுரை: மலைமேல் உள்ள தர்கா கொடிக்கு இந்துக்கள் உற்சாக வரவேற்பளித்ததன் மூலம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் என்பதை திருப்பரங்குன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என்பதுதான் பாஜவின் திட்டம். இதற்காக அவர்கள் கையில் எடுத்த பல பிரச்னைகள் பலனளிக்காததால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப பிரச்னையை கையில் எடுத்தனர். இவர்களின் இந்த திட்டத்திற்கு திருப்பரங்குன்றம் மட்டுமின்றி மதுரை மாவட்டத்திலும் போதிய ஆதரவு இல்லாத நிலையில், வெளியூர் ஆட்களைக் கொண்டு திருப்பரங்குன்றம் பிரச்னையை மதம் சார்ந்த பிரச்னையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் என்பதையே அப்பகுதி மக்கள் நிரூபித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கடந்த 3ம் தேதி கோயில் தரப்பில் வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து சிஐஎஸ்எப் போலீசாருடன், பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் மலைப்பகுதிக்கு செல்ல முயன்றதால், திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்து அமைப்பினரால் போலீசார் தாக்கப்பட்டதுடன், அங்கிருந்த பேரிகார்டுகள் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த போராட்டத்தில் உள்ளூர் மக்கள், வியாபாரிகள் பங்கேற்கவில்லை. இதனால், அவர்களது போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்ட முடியாமல் தோல்வியில் முடிந்தது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை அரசியல் ரீதியாக பாஜ உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக நகர்த்த நினைத்து போராட்டத்தை தீவிரப்படுத்த முயன்றனர். கடந்த 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ேடார் நடத்திய மறியல் போராட்டத்தில் உள்ளூர் கட்சியினர் கூட அவ்வளவாக பங்கேற்கவில்லை. டிச. 5ம் தேதி இந்து அமைப்புகளின் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்றைய தினம் நூறு சதவீதம் கடைகள் திறக்கப்பட்டன. கடை அடைப்பை ஆதரிக்குமாறு பாஜவினர் கூறியதை வியாபாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், கடை அடைப்பு போராட்டமும் பிசுபிசுத்தது. இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பாஜவினர் மேற்கொண்ட கலவர அரசியலை யாரும் ஏற்கவில்லை என்பது மட்டுமின்றி விரும்பவில்லை என்ற நிலையே இருந்தது.

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா சந்தனக்கூடு விழா வரும் ஜன.6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மாலை தர்காவில் நடந்த கொடியேற்ற விழாவில், பல ஆண்டுகளாக பின்பற்றும் பழக்க முறைப்படி, இந்துக்களின் தவில் மற்றும் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம் என்ற மத வேறுபாடின்றி இரு மதத்தினரும் கலந்து கொண்டனர். பெரிய ரத வீதி பாதுஷா பள்ளிவாசலில் இருந்து மாட்டுவண்டியில் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பெரியரத வீதி, திருப்பரங்குன்றம் கோயில் முன்பகுதி, மேலரதவீதி வழியாக மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு கொடி கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த இந்துக்களும் கொடியை வழிபட்டனர்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த முருக பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் கையெடுத்து கும்பிட்டு கொடியை வழிபட்டனர். இதேபோல் வியாபாரிகள் கடையின் வெளியே வந்தும், வீட்டின் வெளியே வந்து பெண்களும் கொடியை வழிபட்டனர். அப்போது கொடியை வரவேற்கும்விதமாக வழங்கப்பட்ட பிரசாதங்களை இருமதத்தினரும் வாங்கிக் கொண்டனர்.

மதத்தையும், கடவுளையும் வைத்து எவ்வளவு தான் அரசியல் செய்தாலும், தமிழக மக்கள் அனைவரும் மதங்களை கடந்து மனிதத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதையே இது காட்டுகிறது. திருப்பரங்குன்றம் மக்கள் எப்போதும் ஒற்றுமைக்கு உதாரணமாக இருப்பார்கள் என்பதையே தர்கா கொடி ஊர்வலம் மீண்டுமொரு முறை உணர்த்தியுள்ளது.

Tags : Hindus ,Madurai ,Thiruparankundram ,BJP ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி...