×

கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்கள் பெயர்: 50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிகள் முடிந்து, மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 74 ஆயிரத்து 608-ஆக குறைந்துள்ளது. 20.17 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், வாக்காளர்கள் உயிரோடு இருந்தும் அவர்களது பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை கே.கே.புதூர் 45வது வார்டில் 48 ஆண்டுகளாக வாக்களித்த பெண், ஒரே முகவரியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. தவிர, ஒரே வீட்டில் உள்ள 4 பேர் இரட்டை வாக்காளர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காமராஜர் 2வது வீதியை ேசர்ந்த ராஜேஷ்வரி கூறுகையில், ‘‘கடந்த 1978 முதல் அனைத்து தேர்தலிலும் வாக்களித்து வருகிறேன். 50 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறேன். தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்து சென்றவர்களின் பெயர் பட்டியலில் இருக்கின்றது. இது என்ன குளறுபடியான சிஸ்டம் என தெரியவில்லை. எனது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நான் போராட வேண்டியுள்ளது’’ என்றார்.

காமராஜர் வீதியை சேர்ந்த சென்னியப்பன், சரோஜா தம்பதியின் மகன் சிவகுமார் கூறுகையில், ‘‘பத்து வருடத்திற்கு முன் என் தந்தை சென்னியப்பன் இறந்துவிட்டார். கடந்த மூன்று வருடத்திற்கு முன் தாயார் சரோஜா இறந்துவிட்டார். இவர்களது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும்படி தெரிவித்தேன். ஆனால், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இடம் பெற்றிருக்கின்றது. மேலும் முகவரியில் இல்லாதவர்களின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றது’’ என்றார்.

விருதுநகர் தொகுதியில் இந்தியில் வாக்காளர் பெயர்
விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருநகரில் 2 வாக்காளர்களின் பெயர்கள் இந்தியில் உள்ளன. இதுபற்றி பேட்டியளித்த தொகுதி எம்பியான மாணிக்காம் தாகூர், தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர்கள் அச்சிடப்பட்டது எப்படி? இந்த குளறுபடிகளுக்கு அமித்ஷா, மோடி, ஞானேஸ்வர் முதலான ஐவர் கூட்டணியினர், இந்திய தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு படாதபாடுபடுத்துவது மிகவும் கொடுமையானது. எஸ்ஐஆர் என்பது தேவையற்ற பணி. ஏழைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார்.

‘5 தேர்தலில் ஓட்டு போட்டிருக்கேன்இப்போ என் வாக்கை நீக்கிட்டாங்க…’
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த ஷேக் மொய்தீன் கூறுகையில், நான் 24வது வார்டில் வசிக்கிறேன். எனக்கு எஸ்.ஐ.ஆர் பார்ம் கொடுத்தாங்க. நான் எனக்கு, என்னுடைய மனைவி, அம்மா, பாப்பாவுக்கு பில் செய்து கொடுத்தேன். அட்ரஸ் கரெட்டாக பில் பண்ணி கொடுத்தேன். ஆனால், எங்க வீட்டில் எல்லாருக்கும் ஓட்டு வந்திடுச்சு. ஆனா, எனக்கு மட்டும் இடம் பெயர்ந்தவர் என்று வந்திருக்கு. நான் 5 சட்ட மன்ற தேர்தலில் ஓட்டு போட்டு இருக்கேன். ஆனா, எஸ்.ஐ.ஆரில் என் வாக்கை நீக்கி விட்டாங்க’ என்றார்.

Tags : Coimbatore ,SIR ,
× RELATED தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி...