×

எல்.ஜி.பி.டி பிரிவினரை குறிப்பிட சொல்லகராதி வெளியீடு தன் பால் ஈர்ப்பு ஆண், பெண் என்றே அழைக்க வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான சொல்ல அகராதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சொல் அகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே இப்பிரிவினரை குறிப்பிட பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்.ஜி.பி.டி. க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது. எல்.ஜி.பி.டி. க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல் அகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 25ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சொல் அகராதி குறித்த அரசிதழ் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அரசிதழ் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர் என்றும், திருநங்கை, திருநம்பி என்று இடத்துக்கு ஏற்ப அழைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் பாலீர்ப்பு ஆண் (gay),தன்பாலீர்ப்பு பெண் (lesbian)என்றும், இரு பாலீர்ப்புடைய நபர் (bisexual)என்றோ அழைக்கலாம். பால்புதுமையர் (queer)என்றும் அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதி, எல்.ஜி.பி.டி. பிரிவினரை குறிப்பிட ஊடகங்கள், அமைப்புகள் இந்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 
அப்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வரைவு விதிகள், சட்டத்துறை ஒப்புதல் பெற்று உத்தரவுக்காக முதல்வர் முன் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் விதிகளை இறுதி செய்து அறிவிக்கவும், மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்பான கொள்கை வகுக்கவும் அரசுத்தரப்பில் ஆறு மாத கால அவகாசம் கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே கொள்கை வகுப்பதற்கு தரப்பட்ட அவகாசம் ஓராண்டு கடந்த நிலையில் மேலும் ஆறு மாதம் அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. சமுதாயத்தில் ஓரங்கட்டப்படும் இப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே, கொள்கை வகுக்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : To refer to the LGBT category, the dictionary publication should call its attraction male and female; High Court order
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...