×

ராணிப்பேட்டையில் 2வது நாளாக நிதிநிறுவன உரிமையாளரின் நண்பர் வீட்டில் சோதனை

ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஐஎப்எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. இங்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அரசு மற்றும் தனியார் துறையினர், போலீஸ்காரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட்டி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ஐஎப்எஸ் நிதி நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்கள், உரிமையாளருக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சத்துவாச்சாரியில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் வீடு, செங்காநத்தம் பகுதியில் உள்ள ஏஜென்ட் சுகுமாரின் வீடுகளில் ரெய்டு நடத்தினர். காட்பாடி வி.ஜி.ராவ் நகர் சி-செக்டார் 3வது தெருவில் உள்ள ஐஎப்எஸ் நிறுவன உரிமையாளர்களில் மற்றொருவரான லட்சுமி நாராயணசுந்தரம் வீடு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர்.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரத்தில் உள்ள நிதி நிறுவன கிளை அலுவலகம், உறவினர் வீடு ஆகிய 2 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.9 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் லட்சுமி நாராயணசுந்தரத்தின் நெருங்கிய நண்பரும், உதவியாளருமான நெமிலியில் உள்ள ஜெகன்நாதன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இரவு வரை நடந்த சோதனையில் ரூ.7 லட்சத்து 7 ஆயிரம், 2 லேப்டாப், 3 செல்போன்கள், 5 பென்டிரைவ், 3 காசோலை புத்தகங்கள், 45 பத்திரங்கள் உட்பட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நெமிலியில் உள்ள ஜெகன்நாதன் வீட்டில் மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் என மொத்தம் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணி முதல் ஜெகன்நாதன் வீட்டில் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆற்காட்டில் ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த ஐஎப்எஸ் கிளைக்கு நேற்றிரவு சிலர் வந்துள்ளனர். அவர்கள் இரவோடு இரவாக உள்ளே இருந்த பொருட்கள், ஆவணங்கள் பெயர் பலகை ஆகியவற்றை எடுத்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனை இன்று காலை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பணம் கட்டியவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

Tags : Ranipette , Ranipet, financial institution owner, home search
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...