×

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

சென்னை, மே 22: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் வனத்துறையிடம் வழங்க முடியாது, என பசுமைத் தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி, வங்கக் கடலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதுதான் சென்னையின் ஒரே சதுப்பு நிலம். இங்கு அலையாத்தி தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 சதுப்பு நில பகுதிகள் உள்ளன. அவற்றில் பள்ளிக்கரணை தவிர கோடியக்கரை வன உயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவாகும்.

இந்த சதுப்பு நில பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது, மழைநீர் வெளியேற வழியின்றி பள்ளிக்கரணையை சுற்றியுள்ள மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதாக செய்தி ஒன்று 2016ம் ஆண்டு வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இதை வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

அந்த வழக்கில் மாநகராட்சி நிர்வாகம், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் 173.56 ஹெக்டேர் பரப்பளவில் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதில் உள்ள குப்பை தற்போது பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு சுமார் 16 ஹெக்டேர் பரப்பளவு நிலம் மீட்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மீதம் உள்ள இடத்தையும் மீட்டு அதை சதுப்பு நிலப்பகுதியாக வனத்துறை பராமரிக்கும் திட்டத்திற்கு ஒப்படைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி நிர்வாகம் கடந்த 30 ஆண்டுகளாக பெருங்குடி பகுதியில் (பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி) கொட்டியுள்ள குப்பை 30.61 லட்சம் கனஅடி அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை பயோ மைனிங் முறையில் தூய்மை இந்தியா இயக்க நிதியில் ரூ.350.65 கோடியில் அகழ்ந்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 14 லட்சத்து 55 ஆயிரம் கனஅடி குப்பை (48 சதவீதம்) அகற்றப்பட்டு 16 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இப்பணி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும். இங்கு மீட்கப்படும் இடத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா, பசுமை போர்வை ஏற்படுத்தும் பெருந்திட்டம் ஒன்றை வகுக்க, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலமாக கலந்தாலோசனை முகமை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு கடந்த ஆண்டே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடியாயது, என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,Chennai ,Chennai Municipality ,Department ,Green Court ,Dinakaran ,
× RELATED அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய...