×

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னை, மே 23: கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் துறைக்கு ₹35 கோடி செலவில் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வருவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்குதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டிடம் ₹35 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும், என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப் பேரவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர், 30.3.2023 அன்று ₹35 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக 24.8.2023 அன்று இக்கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய மருத்துவமனை கட்டிடம் மொத்தம் 88,039 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, மனநல புறநோயாளிகள் பிரிவு நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு, முதல் மற்றும் 2ம் தளங்களில் மூப்பியல் பிரிவு, நரம்பியல் புறநோயாளிகள் பிரிவு, அறிவாற்றல் பழகுமுறை மற்றும் குழந்தைகள் ஆலோசனை அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 3ம் தளம் உள்நோயாளிகள் பிரிவு, புலன் உணர்வு அறை, அடிமைத்தன்மை மீட்பு ஆலோசனை அறை, போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4ம் மற்றும் 5ம் தளங்கள் நரம்பியல் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 6ம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் போன்ற வசதிகளும் இடம்பெறும்.

இக்கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொதுக் கழிப்பிடம், 2 மின் தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வு தளம், மருத்துவ-திரவ ஆக்சிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது, என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொதுப்பணி துறை மூலம் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4,821 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 941 மருத்துவ துறை சார்ந்த புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் மேலும் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : World Class ,Psychiatry, Neurology Department ,Kilpauk Mental Hospital ,Chennai ,Department of Psychiatry and Neurology ,Kilpakkam Mental Hospital Complex ,Tamil Nadu Government ,Tamil ,Nadu ,Chief Minister… ,New World Class Building for Psychiatry, Neurology Department ,Kilpakkam Mental Asylum ,Coming Soon ,
× RELATED கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில்...