புதுக்கோட்டை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துத்தநாக பாக்டீரியா உயிர் உரத்தினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் துத்தநாகத் திரவ பாக்டீரியா உயிர் உரம் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. இது மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தினைக் கரைத்துப் பயிருக்கு வழங்குகிறது.
துத்தநாக உயிர் உரத்தினைப் பயன்படுத்துவதால் துத்தநாக சல்பேட் உரப் பயன்பாட்டினை 50 சதவீதம் குறைக்கலாம். அதாவது ஒரு ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட் உரம் போதுமானது.
நெல், மக்காச்சோளம், கம்பு, எள், நிலக்கடலை மற்றும் இதர பயிர்களுக்கு இந்த துத்தநாக பாக்டீரியா எனும் உயிர் உரத்தினை மண்ணில் இடுவதால் அப்பயிர்கள் துத்தநாகச் சத்தினை எளிதாக எடுத்துக்கொள்ளும்.நெற்பயிருக்குப் பயன்படுத்தும் முறைகள்:
துத்தநாக பாக்டீரியா எனும் உயிர் உரம் திடம், திரவம் எனும் இரு நிலைகளில்; பயன்பாட்டில் உள்ளது. விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் துத்தநாக திட பாக்டீரியா அல்லது 50 மி.லி. துத்தநாக திரவ பாக்டீரியா கொண்டு தேவையான அளவு ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 40 லிட்டர் நீருடன் 400 கிராம் துத்தநாக திட பாக்டீரியா அல்லது 100 மி.லி. துத்தநாக திரவ பாக்டீரியாவைக் கலந்து அக்கரைசலில் நெல் நாற்றுகளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நனைத்து நடவு செய்திட வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான அளவு 800 கிராம் துத்தநாக திட பாக்டீரியா அல்லது 200 மி.லி. துத்தநாக திரவ பாக்டீரியாவை 10 கிலோ மட்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.
துத்தநாக பாக்டீரியாவைப் பயன்படுத்துவதால் பயிருக்கு அதன் வளர்ச்சி காலம் முழுவதும் துத்தநாகச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. துத்தநாகச் சத்தினை நெற்பயிர் எடுத்துக்கொள்ளும் வீதத்தை உயர்த்தலாம். மணி மற்றும் சாம்பல் சத்தின் அளவினை அதிகரிக்க செய்கிறது.இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
துத்தநாக பாக்டீரியா தேவைப்படும் விவசாயிகள், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொண்டு திட பாக்டீரியாவை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையிலும், திரவ பாக்டீரியாவை ஒரு லிட்டர் ரூ.350 என்ற விலையிலும் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
