ராணிப்பேட்டை நகரம் பிஞ்சி ஜெயராம் நகரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்த விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை நகரம் பிஞ்சி ஜெயராம் நகரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கழிப்பிடம் கட்டிய விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறைதீர்வுநாளில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். இதில், டிஆர்ஓ குமரேஷ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் இளவரசி, மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை நகரம் பிஞ்சி ஜெயராம் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் ராணிப்பேட்டை நகராட்சி 11வது வார்டு பிஞ்சி ஜெயராம் நகரில் வசித்து வருகிறோம். இந்நிலையில், நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் 6 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கழிப்பிடம் மற்றும் மாட்டு கொட்டகை அமைத்து வருகிறார். 150 ஆண்டுகள் பழமையான ராமர் கோயிலை புதுப்பிக்கவும், சுற்றுச்சுவர் எழுப்பவும், ஆலய வழிபாடு செய்ய உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் நாட்டாமைதாரர்கள் தெரிவித்தனர்.

 ஆனால், ஆலய வழிபாடு செய்யும் இடத்தில் கழிப்பிடம் மற்றும் மாட்டு கொட்டகை கட்டி வருகிறார்.

இதனை தடுக்ககோரி ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். தொடர்ந்து, பிஞ்சி ஆர்ஐ, மற்றும் டிஎஸ்ஓ ஆகியோர் ஆய்வு செய்து வழிபாட்டு தலத்தை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று வாய்மொழியாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதனால், எந்த அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், ஒன்றும் செய்ய முடியாது, என்று மிரட்டுகிறார். எனவே, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து பழமையான கோயிலை புதுப்பித்து  ஆலய வழிபாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக ஆர்டிஓ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஜெஸ்டின் பிரபாகரன்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. எனது குடும்ப வறுமையில் காரணமாக மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை. எனவே,  வந்தேன். இதனிடையே எனது மற்றொரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள எனக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி உதவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Related Stories: