×

தமிழகத்தில் 56 இடங்களில் புதிய பஞ். யூனியன் அலுவலகங்கள்: ரூ230 கோடி அனுமதித்து அரசு உத்தரவு

நெல்லை: தமிழகத்தில் தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 56 இடங்களில் புதிய பஞ். யூனியன் அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊரக பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதற்காக 550 கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள், 15 பஞ். யூனியன் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள், 500 அங்கன்வாடி கட்டிடங்கள் ஆகியவை ரூ.233.25 கோடியிலும், 20 பஞ். யூனியன் அலுவலக கட்டிடங்கள் ரூ.79 கோடியிலும் கட்டப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில் கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருச்சி, நெல்லை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்கள் புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடங்கள் கட்டவும், நெல்லையில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம் கட்ட நெல்லை கலெக்டரும் பரிந்துரை செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, தக்கலை, தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி ஆகிய பஞ்சாயத்து யூனியன்களுக்கு புதிய அலுவலகம் கட்ட தலா ரூ.3.95 கோடி அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தஞ்சாவூர், கோவை, பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களில் தலா 2 பஞ். யூனியன்கள், திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம், திருவாரூரில் தலா 4 பஞ். யூனியன்கள், திருச்சி, கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 3 பஞ். யூனியன்கள், ராமநாதபுரம், திருச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் தலா ஒரு பஞ். யூனியனுக்கும் என மொத்தம் 57 பஞ். யூனியன்களுக்கு தலா ரூ.3.95 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம் கட்ட ரூ.9.50 கோடி அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.230 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையின் ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : New Panch ,Tamil Nadu , New Panch in 56 places in Tamil Nadu. Union Offices: Government Order Allowing Rs 230 crore
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...