×

சரிதா நாயர் பலாத்கார சர்ச்சை கேரள முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

திருவனந்தபுரம்:தமிழகம், கேரளாவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக எழுந்த  புகாரில், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் உள்பட 6 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக  சரிதா நாயர் புகார் கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உம்மன்சாண்டி முதல்வராக இருந்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் கூறி இருந்தார்.

தற்போது, அந்த வீட்டில் முதல்வர் பினராய் விஜயன் தங்கியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, சரிதா நாயர் முதல்வர் பினராய் விஜயனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, கடந்தாண்டு இந்த வழக்கு சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தங்கியுள்ள அரசு வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, சரிதா நாயரும்  உடனிருந்தார். காலை 9.45 மணி தொடங்கிய சோதனை பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. சோதனையின் போது முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் இல்லை. அவர் சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்று உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.


Tags : CBI ,Kerala ,CM ,Sarita Nair , CBI raids Kerala CM's residence on Sarita Nair rape controversy
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...