×

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்றவர் என கருதி திருநங்கையருக்கு ரூ.1000 மாத உதவிதொகை வழங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் - மகளிர் உரிமை துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் (திமுக) பேசியதாவது: 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் அறிந்தவரை, தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணர்வை வீட்டில் வெளிப்படுத்திய நாளில் இருந்தே அவர்கள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு மாத உதவித்தொகையை வழங்க வேண்டும்.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலருகில் சென்று கடலை ரசிக்கும் வகையில் தற்காலிக நடைபாதையை முதல்வர் அமைத்து தந்தார். மெரினாவில் மட்டுமின்றி பெசன்ட் நகர் கடற்கரைகளில் நிரந்தர பாதையாக அமைக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை கடற்கரை உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க 20க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை துறையே நடத்தி வருகிறது. அந்த பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சொல்லித்தர தேவையான ஆசிரியர்களை நியமித்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக அந்த பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் ஆகிய உள்ளடங்கிய கல்வி கற்க வசதியான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

40 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளின் அனைத்துவிதமான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். 4 சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால் அது அனைத்து துறைகளிலும் பொருந்தும். போக்குவரத்து, காவல்துறையாக இருந்தாலும் அங்கு அவர்களுக்கான அந்த 4 சதவிகிதத்தை கண்டறிய வேண்டும். நம் சட்டம் 21 வகை மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கிறது. ஆனால் இவர்களுக்கான பணியிடங்களை அரசு, தனியார் துறைகளில் நாம் கண்டறிய வேண்டும். இதற்காக ஒரு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* என் காரை எடுத்துட்டு போங்க.. ஆனா கமலாலயத்துக்கு போயிராதீங்க.. - எடப்பாடியிடம் உதயநிதி

பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சமூக நலன் - மகளிர் உரிமை துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்த பேரவை தலைவர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், சென்ற ஆண்டு நான் பேசும்போது வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். நேற்றும் (செவ்வாய்) வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இன்று நான் பேச இருப்பதால், வெளிநடப்பு செய்து விடுவீர்கள் என்று நினைத்தேன், ஆனால் செய்யவில்லை. இதற்காக எனது நன்றி. அப்படியே எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில் தவறுதலாக ஏறி செல்ல முயன்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நானும் 3 நாட்களுக்கு முன் உங்கள் காரில் ஏறி செல்ல முயன்றுவிட்டேன். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம். ஆனால் தயவுசெய்து கமலாலயம் (பாஜ தலைமை அலுவலகம்) சென்று விடாதீர்கள். (அப்போது பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.)

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: எங்களுடைய கார் எப்பொழுதும் எம்ஜிஆர் மாளிகை (அதிமுக தலைமை அலுவலகம்) நோக்கிதான் செல்லும் என்றார்.

Tags : Udayanithi ,Stalin , Udayanithi Stalin demands Rs.1000 monthly stipend for transgender people above 18
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...