×

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

சென்னை: கழக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது; தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமான பேராசிரியர் ஆகியோரை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களுக்கும்,
இந்திய ஒன்றிய மாநில முதலமைச்சர்களில் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயரெடுத்து, திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவை முன்னவரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அண்ணன் கு.பிச்சாண்டி அவர்களுக்கும், இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும் வாய்ப்பை எனக்கு வழங்கிய கழகத்தின் கொறடா அண்ணன் கோ.வி.செழியன் அவர்களுக்கும், இந்த மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கவுள்ள மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அக்கா கீதா ஜீவன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும்,  எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களுக்கும், கடந்த சில தினங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டபேரவையை விட்டு வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில் தவறுதலாக ஏறமுயற்பட்டார்.

ஆனால் அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம் ; ஆனால் வழக்கம் போல  கமலாலயம் சென்றுவிட வேண்டாம். அனைத்து கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களுக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 100 சதவிகித வெற்றியை நம் முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கிய தமிழக மக்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சியில் வென்று பொறுப்பேற்றுள்ள கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், குறிப்பாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கும்,  என் தாயார் உள்பட பார்வையாளர் மாடத்திலிருந்து என் பேச்சை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், பத்திரிகை, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அலுவலர்கள் அனைவருக்கும், வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து என் உரையை தொடங்குகிறேன்.  

நான், அரசியலையும் அரசையும் அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றவன். அதன்மூலம், அரசு துறைகள் குறித்து ஓரளவுக்கு சில விஷயங்களையும் தெரிந்துவைத்திருந்தேன். ஆனாலும் இந்தத் துறைகளை நெருங்கி சென்று பார்க்கும் வாய்ப்பை என் தொகுதி பணிகள்தான் எனக்கு வழங்கின. தொகுதியில் தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தோம். தொகுதியில் மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், பொதுக் கழிப்பிடங்கள்… என எல்லா இடங்களையும் சுற்றி வந்தோம். ஆற்காடு இளவரசரின் இல்லமாக இருந்தாலும் சரி, கொய்யாதோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியாக இருந்தாலும் சரி, அனைத்தையும் ஒன்றென கருதி மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். பலதரப்பட்ட சமூகச் சூழல், வேறுபட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களை சந்தித்ததன் மூலம் அவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள கிடைத்த பயிற்சி பட்டறையாகத்தான் இந்த ஓராண்டு தொகுதிப் பணிகளை பார்க்கிறேன்.

இதேபோல மனுக்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்கூட தன் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது, ‘இந்த ஆட்சி அமைய காரணமாக இருந்தது ஒன்று மனுக்கள். மற்றொன்று செங்கல்’ என்றார். மொத்தத்தில், தமிழகத்துக்கு நல்லது செய்வார் என்று, நம் தலைவர் அவர்களை நம்பிய மக்கள். அவர்கள்தான் காரணம். மனுக்கள், ஆட்சி மாற்றத்துக்கான அடிக்கல் என்று சொல்லலாம். அந்த வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்களில் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இத்துறை, ‘முதல்வரின் முகவரி’ என்று தனித்துறையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை  11,42,960 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல் எங்களுடைய தொகுதியில், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதியோர்-ஆதரவற்றோர் ஓய்வூதியம், வீடு, பட்டா, மின் இணைப்பு, கொரோனா இறப்பு இழப்பீடு… இப்படி பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து குவிந்த மனுக்களைப் பார்த்து ஆரம்பத்தில் மலைத்துப் போனோம். தொகுதியில் இறங்கினாலே மனுவுடன் நிற்பவர்கள், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நிலை குறித்து நினைவுபடுத்துபவர்கள்… இப்படி மக்கள் என்னை மனுவுடன் துரத்த, தீர்வை நோக்கி நான் அந்தத் துறை அமைச்சர்களைத் துரத்த இந்தத் தொடர் துரத்தலில் கிடைத்த பாடங்களின் வழியாகத்தான் பல்வேறு அரசுத் துறைகளை நெருங்கிச் சென்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றேன்.

அதிலும் மகளிர்-குழந்தைகள்-திருநங்கையர்களை உள்ளடக்கிய, இன்று நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்ந்த மனுக்கள்தான் என்னுடைய தொகுதியில் அதிகம் வந்தன. அதனால், இந்தத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேச விரும்புவதாக, கொரடா அவர்களிடம் ஆரம்பத்திலேயே என் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டேன்.
திருநங்கையர் இன்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கையர்களிடமிருந்து குறைந்தபட்சம் நாளொன்றுக்கு நான்கைந்து மனுக்களாவது எனக்கு வந்துவிடுகின்றன. கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த சமயம். உதவிப் பொருட்களின் தொகுப்பு அடங்கிய ஒரு லட்சத்து 30 ஆயிரம் பைகளை தயார் செய்து, தொகுதியில் தடுப்பூசி செலுத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் வழங்கிவந்தோம்.
அப்போது, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியாக தினமும் நான்கைந்து திருநங்கையர் சகோதரிகள் உடன் வருவார்கள்.

ஒருநாள், ‘இவ்வளவு பேருக்கு ஊசிபோட உதவி பண்றீங்களே, நீங்க எல்லாம் தடுப்பூசி போட்டீர்களா’ என்று கேட்டேன். ‘நீங்களாவது கேட்டீங்களேண்ணா’என்றார் ஒரு திருங்கை சகோதரி. அடுத்தநாளே தொகுதியில் உள்ள 140 திருநங்கையருக்கும் தனியாக முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கினோம். அதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து சென்னையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருங்கையருக்கு தொகுதியில் முகாமுக்கு ஏற்பாடு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி நிவாரணப் பொருட்களை வழங்கினோம். மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதா ஜீவன் அவர்களின் உதவியுடன் தொகுதியில் உள்ள திருநங்கையர் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்கியிருக்கிறோம். இன்று நான் தொகுதிக்கு சென்றால் என்னை வரவேற்க, திருநங்கை நலவாரிய உறுப்பினர் அனுஸ்ரீ உள்ளிட்ட திருநங்கை சகோதரிகள் நான்கைந்து பேராவது வந்துவிடுவார்கள்.

நான் ராயப்பேட்டை பக்கம் சென்றால் பந்தோபஸ்து பணிக்காக தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி வருகிறார். திருநங்கையர்ககளுக்கான சட்டதிட்டம் குறித்த சந்தேகம் என்றால், திருநங்கை சமூக செயற்பாட்டாளரான சுதா அவர்களிடம்தான் கேட்டு தெளிவுபெறுகிறேன்… இப்படி அனைத்துத் திருநங்கையரும் என்னை ஒரு சகோதரனாகவே நினைத்து அன்பு பாராட்டுகின்றனர்.    
இந்த நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரை நினைத்துக்கொள்கிறேன். அனைத்துத் தரப்பினரும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான சமூக வளர்ச்சி என்பதை உணர்ந்து அவர் மேற்கொண்ட திட்டங்களை எண்ணி வியக்கிறேன். மூன்றாம் பாலினத்தவருக்கு ‘திருநங்கை’ என பெயர் சூட்டுகிறார். அதைத்தொடர்ந்து திருநங்கை நல வாரியத்தை அமைக்கிறார். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறார். அதைவைத்து ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என சொல்கிறார்.

இன்று ஆதார் அட்டை பெற வேண்டும் என்றாலும் அந்த அடையாள அட்டைதான் அவர்களுக்கு பேருதவியாக உள்ளது. 2008 ஏப்ரல் 15 திருநங்கை நல வாரியம் அமைத்ததை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் நாளை திருநங்கையர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கிறார்.  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாதத்தில் ஒருநாள் திருநங்கையர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெபெற வேண்டும் என்று சொல்கிறார். சுயதொழில் தொடங்க மானியத்துடன்கூடிய உதவித்தொகை வழங்கிறார். 5 திருநங்கைகள் இருந்தாலே திருநங்கைகள் சிறப்பு சுயஉதவிக்குழு தொடங்க அனுமதி அளிக்கிறார்.  

சமத்துவபுரங்களிலும், குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளிலும் வீடுகளை ஒதுக்கீடு செய்கிறார்.
ஆனால் 2014ம் ஆண்டுதான் உச்சநீதிமன்றம், ‘இன்றிலிருந்து இவர்களை மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்லவேண்டும். எந்தப் பணியிலும் இவர்களை ஒதுக்கக்கூடாது’என்றது. 2014ல்தான் உச்சநீதிமன்றம் இவர்களை மாற்றுப் பாலினத்தவர் என்று அங்கீகரிக்கிறது. ஆனால் கலைஞரோ 2008-லேயே திருநங்கையர் என பெயர் சூட்டி, வாரியம் அமைத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார். அதனால்தான் திருநங்கையர் மகிழ்ச்சியாக, தன்னிறைவுடன் வாழும் மாநிங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக, முற்போக்கு மாநிலமாக விளங்கிக்கொண்டு இருக்கிறது.  

திருநங்கையர்களுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எப்படி முன்னோக்கி எடுத்துச்செல்கிறார் என்பதைப் பார்த்தாலே அவரின் சிந்தனையை நாம் உணர முடியும். அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் நகரப் பேருந்துகளில் பெண்களைப் போன்றே திருநங்கையர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக, திருநங்கையரான முனைவர் நர்த்தகி நடராஜ் அவர்களை நியமனம் செய்தார். தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தில் 2 திருநம்பிகள் உள்பட 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

எங்களின் கழகத்தின் சார்பில் ரியா என்ற திருநங்கையை ஒன்றிய குழு உறுப்பினராகவும், கங்கா என்ற திருநங்கையை வேலூர் மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் நிறுத்தி வெற்றிபெறவைத்துள்ளார். திருநங்கையர் நினைத்த மாத்திரத்தில், எளிதில் சந்திக்கக்கூடியவராக நம் முதலமைச்சர் இருக்கிறார். திருநங்கையர் தினத்தன்று திருநங்கையர்களை தனது வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுக்கிறார். இப்படி எந்த மாநிலத்திலாவது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

இன்று, திருநங்கையர்களில் சகோதரி கார்த்திகா என்பவர் மருத்துவர் ஆகியுள்ளார். பல பொறியாளர்கள் உருவாகியுள்ளனர். வேலூரில் ஒரு திருநம்பி போலீஸ் ஆய்வாளராக உள்ளார். திருநங்கையரில் பிரித்திகா யாசினி, ஷிவன்யா ஆகிய இருவரும் சென்னை, திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். திருநங்கையரில் ஐந்து பேர் காவலர்களாக உள்ளனர். லயோலா கல்லூரியில் ஜென்சி என்ற திருநங்கை மாணவி ஆங்கிலத் துறையில் பி.எச்டி செய்கிறார். மிருதுளா, சாக்ஷி, ஷர்மிகா, சஹானா ஆகிய திருநங்கைகளும் தீபக், ருத்ரன் என்ற திருநம்பியர்களும் அதே லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். இதேபோல வெவ்வேறு கல்லூரிகளில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பிசியோதெரபிஸ்ட், லேப் டெக்னிஷியன்ஸ், தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டிகள்… என தங்கள் திறமைக்கேற்ற பணிகளை திருநங்கையர்கள் பெற்றுவருகின்றனர்.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் திருநங்கையர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் என்று இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் 131 உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பு படிக்க தலா ஒரு இடம் திருநங்கையர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் முன்னெடுப்பில், அதன் தொடர்ச்சியாக நம் முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகளால் திருநங்கையர்களையும் உள்ளடக்கிய சமத்துவ - சமூகநீதி அரசு நடைபெற்று வருவதை நினைத்து நாம் பெருமை கொள்ளலாம். இந்தநேரத்தில் அவர்கள் சார்பாக சில கோரிக்கைகளை பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிலர் பள்ளிப்பருவத்திலேயே தாங்கள் திருநங்கை என்பதை உணரத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் தங்களின் நிலையை வீட்டிலும் சொல்லமுடியாமல், சக மாணவர்களிடமும் பகிர முடியாமல் தவிக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் கவுன்சிலிங் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. இதை ஆசிரியர்கள் உணர வேண்டும். தமிழகத்தில் அதிகபட்சம் 25 ஆயிரம் திருநங்கையர் இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர்தான் திருநங்கையர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவுசெய்து அடையாள அட்டை பெற்று அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

வாரியத்தில் பதிவு செய்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் என்ற சூழலில் அனைத்துத் திருநங்கைகளையும் வாரியத்தில் பதிவு செய்ய நம் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் அறிந்தவரை, தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணர்வை வீட்டில் வெளிப்படுத்திய நாளில் இருந்தே அவர்கள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர்.

எனவே 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு மாத உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதிகபட்சம் 20 முதல் 25 ஆயிரம் திருநங்கையர்கள்தான் மாநிலத்தில் இருப்பார்கள் எனத் தெரிகிறது. அதனால் மாநிலத்தில் உள்ள மருத்துவ-பொறியியல்-கலைஅறிவியல் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தலா ஒரு இடத்தை அவர்கள் இலவசமாக படிக்க ஒதுக்கித்தர ஏற்பாடு செய்யவேண்டும் என்று உங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். இதேபோல அரசு-தனியார் அலுவலகங்களிலும் அவர்களின் கல்வித் திறனுக்கேற்ற ஒரு பணியை ஒதுக்கித்தந்தால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சுயமரியாதையுடன் அமைத்துக்கொள்ள பேரூதவியாக இருக்கும்.

திருநங்கைகளில் பலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதை பார்க்கிறேன். இந்தச்சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் திருநங்கையர் போன்றே மாற்றுத்திறனாளிகளும் அரசின் மீதும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் மீதும் அளவுகடந்த அன்பும் பற்றும் கொண்டுள்ளனர் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து அவர்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை தொகுத்து துறையை வழிநடத்தும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அனுமதிபெற்று சம்பந்தபட்ட அலுவலர்களிடம் வழங்கினேன். பணிகள் அவ்வளவு வேகமாக நடைபெற்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை துறை சார்பாக தொடர்ந்து நடத்தி, செயற்கை கால்கள், காது கேட்கும் கருவிகள், மூன்று சக்கர வாகனங்கள், நிதி உதவி போன்றவற்றை வழங்கி வருகிறோம். எங்கெங்கிருந்தோ வரும் மாற்றுத்திறனாளிகள் என்னிடம் மனு அளிக்கின்றனர். அந்த மனுக்களுடன், மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்று, அதில் ஊனத்தின் சதவிகிதம் போன்றவற்றுடன் அவர்கள் இணைத்துள்ள அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போதே அவ்வளவு வருத்தமாக இருக்கும். அப்படித்தான் ஒருமுறை தூத்துக்குடியில் இருந்து ஜஸ்டின் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் தன் மூன்று சக்கர வாகனத்திலேயே என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்திருந்தார்.

இனி இப்படி வரக்கூடாது என்று அவரிடம் கேட்டுக்கொண்டு, அவர் வைத்த கோரிக்கையின்படி பெட்டிக்கடை வைக்க கழக இளைஞர் அணியின் சார்பில் உதவி செய்தோம். அந்த பெட்டிக்கடையை தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியான மருத்துவமனை அருகிலேயே வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுத்தந்தது மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்கள்தான் என்பதை இந்தசமயத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அந்த ஜஸ்டின் இன்றும் என்னுடன் தொடர்பில் உள்ளார். இளைஞர் அணியின் சார்பில் உதவி பெற்று கடை வைத்த அவர் இன்று இளைஞரணிக்கு வளர்ச்சி நிதி வழங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இப்படி, உதவி தேவைப்படும்போது கைப்பிடித்து தூக்கிவிடும் ஒரு கரம்தான் அவர்களுக்குத் தேவை.

இப்படிப்பட்ட துறையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், முதல்வராக இருந்தபோது தன் வசம் வைத்துக்கொண்டார். தன் தள்ளாத வயதிலும் சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடி மாற்றுத்திறனாளிகளின் தாய்போல அவர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டார். ஊனமுற்றோர் நலத்துறை என்றிருந்ததை ‘மாற்றுத் திறனாளிகள்’ துறை என்று பெயர் மாற்றம் செய்ததே கலைஞர் அவர்கள்தான். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாரியம் அமைத்தது, வேலை வாய்ப்பில் 3 % இடஒதுக்கீடு வழங்கினார்.கட்டடங்களில் சாய்வு நிலை நடைபாதைகள் அமைத்ததும், பேருந்துகளில் தரைத்தாழ் படிகள் அமைத்துத் தர உத்தரவிட்டதும் கலைஞர் அவர்கள்தான்.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக வழிவகை செய்துத்தர உத்தரவிட்டதும் அவரே. அதன்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற நம் மாண்புமிகு முதல்வர் அவர்களும் கலைஞரைப்போன்றே இந்தத் துறையை தன் வசம் வைத்துக்கொண்டார். மாண்புமிகு முதல்வர்கள் அவர்களும் கலைஞரைப்போன்றே மாற்றுத் திறனாளிகள் மீது மிகுந்த அன்புகொண்டவர்.
1984ல் முதல்முறையாக சட்டமன்றமன்றத் தேர்தலில் நின்றபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஃப்ளவர் காது கேளாதோர் பள்ளிக்கு சென்றார். அந்த வருடம் தனியாகச் சென்றவர், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் ஒவ்வொரு பிறந்தநாளின்போது குடும்பத்துடன் சென்று அங்குள்ளவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படி கடந்த 38 ஆண்டுகளாக அந்த பள்ளிக்கு சென்று வருகிறார். சமீபத்தில்கூட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி போராட்டம் நடத்தியபோது, உடனடியாக அமைச்சர்களையும், துறை அதிகாரிகளையும் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணிநேரத்தில் போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார். இந்த ஒராண்டில் கொரோனா மூன்றாம் அலை சமயத்தில் 10, 12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு வழங்கினார். கலைஞர் பிறந்த ஜூன் 3ம் தேதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவித்தார். கொரோனா சமயத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தார். கொரோனா தடுப்பூசியை வீடுகளுக்கே சென்று போடும் சிறப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். 80 சதவிகிதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களும் இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும், அதன் பிரம்மாண்டத்தை உணர வேண்டும் என்பதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலருகில் சென்று கடலை ரசிக்கும் வகையில் தற்காலிக நடைபாதையை அமைத்துத் தந்தார்.

அதை திறந்துவைக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய மாண்புமிகு நகராட்சித்துறை அமைச்சர் அண்ணன் நேரு அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் கைகளை பிடித்தபடி, முதல்முறையாக கடல் அலைகளை கண்டு மகிழ்ந்த அவர்களைப் பார்த்தபோதுதான், அவர்களுக்கு இது எப்படிப்பட்ட வாய்ப்பு என்பதை உணர்ந்தேன். அந்த அனுபவத்தை அனைவரும் பெற, தற்காலிகப் பாதையை  நிரந்தரப் பாதையாக அமைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை ஏற்று அந்த தற்காலிக நடைபாதையை மெரினாவில் மட்டுமின்றி பெசன்ட் நகர் கடற்கரைகளில் நிரந்தர பாதையாக அமைக்க உள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தை கடற்கரை உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக முன்வைக்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு விலைஉயர்ந்த வீல் சேர்கள், காது கேட்கும் கருவிகள், செயற்கைக் கால்கள் நம் மாநிலத்தில்தான் நம் முதலமைச்சர் அவர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.
இந்தச்சூழலில் அவர்கள் முன்வைக்கும் சில கோரிக்கைகளையும் உங்கள் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் சமூக நலத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் எடுத்துச்செல்ல விரும்புகிறேன்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க 20க்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளிகளை துறையே நடத்தி வருகிறது. அந்த பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சொல்லித்தர தேவையான ஆசிரியர்களை நியமித்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக அந்தப் பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டும் என்றும் கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் ஆகிய உள்ளடங்கிய கல்வி கற்க வசதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை உங்கள் வாயிலாக முன்வைக்கிறேன்.

40 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளின் அனைத்துவிதமான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 2013ல் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்புக்கும் ஒன்றிய அரசுக்குமான வழக்கில் உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்கள், ‘மாற்றுத்திறனாளிகளை சமூகம் புரிந்துகொள்ளவில்லை. அவர்களை பணியமர்த்துவதற்கான பணியிடங்களை முதலில் கண்டறிய வேண்டும்’ என்று தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள். 4 சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால் அது அனைத்துத் துறைகளிலும் பொருந்தும். போக்குவரத்து, காவல்துறையாக இருந்தாலும் அங்கு அவர்களுக்கான அந்த 4 சதவிகிதத்தை கண்டறிய வேண்டும்.

அதாவது காவல்துறையில் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் (Ministetrial Staffs) போன்று அனைத்துத் துறைகளிலும் இவர்கள் பணிபுரிவதற்கு ஏதுவான பணியிடங்களை கண்டறிய வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைக்கிறார்கள். நம் சட்டம் 21 வகை மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கிறது. ஆனால் இவர்களுக்கான பணியிடங்களை அரசு, தனியார் துறைகளில் நாம் கண்டறிய வேண்டும். இதற்காக ஒரு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை இங்கே உங்கள் வாயிலாக முன்வைக்க விரும்புகின்றேன்.

மாற்றுத்திறனாளிகள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக உள்ளனர். இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தும்போது சரியான இடத்தில் வைத்து இவர்களை அணுக வசதியாக இருக்கும் என்பதையும் அரசுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இதேபோல் சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் மாற்றுத்திறநாளிகள் உதவித்தொகை ரூபாய் ஆயிரத்தில இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அவற்றையும் நிதிநிலைக்கு ஏற்ப அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் கலைஞர் அவர்களின் உத்தரவு கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை அரசின் நிதிநிலைக்கு தகுந்தாற்போல் படிப்படியாகவாவது நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையையும் உங்கள் மூலமாக முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன்.

பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் வங்கிகள் மேலாண்மை சட்டத்தின்கீழ் வருவதால் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வங்கியும் கடன் தருவதில்லை. அதை நேர் செய்யும் வகையில் ‘தாட்கோ’ போல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்கித்தரவேண்டும் என்று கோரிக்கையையும் உங்கள் வாயிலாக அரசுக்கு முன்வைக்கிறேன். எல்லா பல்கலைக்கழகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த ஆய்வு மற்றும் கற்பித்தலுக்கான துறையை முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் உருவாக்கவேண்டும் என்று உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மேலாண்மை மையத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்தத் துறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் உள்ளன. மாற்றுத்திறனாளி நலத்துறையில் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் ஆணையத்தில் முறையிடுவது வழக்கம். ஆனால் தற்போது துறையின் இயக்குநரே ஆணையகத்துக்கும் ஆணையராக இருப்பதால் அங்கு முறையீடு செய்ய மாற்றுத்திறனாளிகள் தயங்குவதாகத் தெரிகிறது. ஆகையால் மாற்றுத்திறனாளிகள் ஆணையகத்துக்கு என தனியாக மாற்றுத்திறனாளி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கை. இக்கோரிக்கையை மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன்.

மகளிர்

கடந்த ஓராண்டாக எங்கள் தொகுதியில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெற்றவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அரசு திட்டங்கள் குறித்து ஆண்களைவிட பெண்களே அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். எந்தக் கோரிக்கை என்றாலும் தயங்காமல் கேட்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்தும், கல்வி உதவித்தொகை குறித்தும் இவர்களே எனக்கு நேரடியாக மனு அளிக்கிறார்கள். ஆன்லைன் கல்விக்கு செல்போன் என்றாலும் சரி, TAB-ஆக இருந்தாலும் சரி, பெண்கள்தான் மனு அளித்து அந்தப் பயனை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுத் தருபவர்களாக உள்ளனர்.

இப்படி தனக்குத் தேவையான கேட்டுப் பெறக்கூடிய தைரியம் மிகுந்த பெண்களை வளர்த்தெடுத்த முன்னோடி மாநிலமாகவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படை, பொருளாதாரத்தில் அவர்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதுதான். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறவேண்டும் என்பதால்தான், திராவிட இயக்கத் தத்துவத்தின் ஆசான் ஐயா பெரியார் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பினார்.
அவர் வழிவந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் புரட்சிகரமான சட்டத்தை 1989-ல் நிறைவேற்றியது.

அதே ஆண்டில் கலைஞர் அரசால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. அரசியல் அதிகாரத்தில் பெண்கள் பங்குபெற வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 % அளித்ததும் கலைஞரின் அரசுதான். அதை 50 சதவீதமாக உயர்த்தியது கலைஞர் வழியில் பயணிக்கும் நம் முதலமைச்சர் அவர்களின் அரசுதான். தலைநகர் சென்னையில் ப்ரியா என்ற முதல் பெண் மேயர். அதுவும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண் மேயர் வரவும் காரணமாக அமைந்தவர் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தான்.

பெண் கல்வியை ஊக்கப்படுத்த அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டதும் நம் முதலமைச்சர் அவர்கள்தான். பெண்களுக்கு பேருகால விடுமுறையை ஓராண்டாக அதிகரிக்கக் காரணமாக இருந்ததும் நம் முதல்வர் அவர்கள்தான். அரசு சார்பில் வழங்கப்படும் வீடுகளை குடும்பத் தலைவிகளின் பெயர்களில் வழங்க உத்தரவிட்டதும் நம் முதல்வர் அவர்கள்தான். இந்தத் திட்டங்களின் நோக்கம் வெறும் நிதி உதவி அளிப்பது மட்டுமல்ல. சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

தேசிய அளவில் நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 15.4% ஆக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ இந்தச் சதவீதம் 21.8% ஆக இருக்கிறது. நகர்ப்புற பெண்கள் பணிக்கு செல்வதையும் கல்வி கற்பதையும் மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் இலவச பேருந்து பயணத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது நம் கழக அரசு. இதை நம் முதலமைச்சர் அவர்களின் பெயரை குறிப்பிட்டு ‘ஸ்டாலின் பஸ்’என்றே சொல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்தப் போது உடனிருந்தேன். அப்போது மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ததற்காக தன்னுடைய அம்மாவின் சார்பில்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

இது மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் ஏழை எளிய பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு எவ்வளவு உதவுகிறது என்பதற்கான சான்று. இத்துறை அலுவலர்கள் கிராமம் தொடங்கி நகரம் வரை அனைவரிடமும் தினமும் தொடர்பில் உள்ளவார்களாக இருக்கின்றனர். இவர்கள் மூலம் குழந்தைகள்-சிறுமிகள்-பெண்களுக்கு கழக அரசு வழங்கும் சலுகைகள், கல்வித் திட்டங்கள் போன்றவற்றை தினமும் எடுத்துரைக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைகள்

குழந்தைகளே ஒரு நாட்டின் வருங்கால சொத்து. அவர்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதால் முதல்வர் அவர்கள் அவர்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அந்தக் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகையாக ரூ.5 லட்சம் செலுத்தப்பட்டு, பராமரிப்புத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரமும், கல்லூரி கல்வி வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என அறிவித்தார்கள். கொரோனாவினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

கொரோனா நெருக்கடியிலும் நம் முதல்வர் அவர்கள் ஒவ்வொரு தரப்பினராக பார்த்து பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார், செய்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் இது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் செயல்பாட்டை நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் பாராட்டியுள்ளார். இதில் இருந்து இந்தத் திட்டங்களின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

இத்திட்டத்தில் பணியாற்றும் 43,880 ஊழியர்கள், கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவும் ஆலோசனைகளும் தந்து நலமான குழந்தைப் பிறப்புக்கு வழிசெய்கிறார்கள். குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு வயது வரை அவர்களின் வளர்ச்சியைக் கண்காணித்து ஊட்டச்சத்து வழங்குவதும் அவர்களின் பணியாகும். 2 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடி வரும் குழந்தைகளுக்கு சத்தான உணவும் முன்பருவக்கல்வியும் இந்தத் திட்டத்தில் தரப்படுகிறது. அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் மூடநம்பிக்கைகள் சார்ந்த கட்டுக்கதைகளாக இல்லாமல் கல்வி-விளையாட்டு-கலை சார்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் கேட்பதைவிட காணொளிக் காட்சிகளாக பார்ப்பதன் மூலமே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.

வாரம் ஒருமுறை காணொளிக்காட்சியாக Projector வசதியுடன் கதைகள்-காட்சிகளை திரையிட்டுக்காட்டுவதன் மூலம் அவர்களின் சிந்திக்கும் திறன், கற்பனை வளம் கூடும். இதற்கு குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.  நான் இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகள் குறித்துதான் அதிகம் பேசியிருக்கிறேன். அவர்கள் உடலால் மட்டுமே ஊனமுற்றிருக்கிறார்களே தவிர உள்ளத்தால் அல்ல என்பதை கழக அரசு தன்னுடைய திட்டங்களின் மூலம் தொடர்ந்து நிறுபித்து வருகிறது.  

தமிழ் சமூகத்தில் மாற்றம் உருவாகப் பிறந்தது, மறுமலர்ச்சி ஏற்படுத்த எழுந்ததுதான் திராவிட இயக்கம்.  சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் இலட்சியத்தோடுதான் இந்த இயக்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்தது. பொருளாதார திட்டங்களை செயல்படுத்துகிறது. சமூக வளர்ச்சி வேண்டும். அது குழந்தைகள், பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த இலட்சியங்களை நோக்கி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உறுதியுடன் பயணிக்கும் என்பது நிச்சயம். இங்குள்ள பலர் என்னை ‘சின்னவர்’ என்றும் ‘சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை’ என்றும் அழைப்பதை கேட்கிறேன்.

இங்குள்ள தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே நான் சின்னவன்தான். மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்கு உங்கள் அனைவரின் அன்பையும் ஆலோசனையும் வழங்குமாறும் வழிகாட்டுமாறும் பேரவைத் தலைவர் உள்ளிட்ட இந்த அவையினரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சிப்பொறுப்பேற்று இந்த ஓராண்டுகளில் தலைவர் அவர்களின் உழைப்பை, மக்கள் பணியைப் பார்த்து எதிர்க்கட்சியினரும் பாராட்டுகின்றனர். இதுதான் மாண்புமிகு நம் முதல்வருக்கு, தலைவர் அவர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.  இத்துறை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு வழங்கிய பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், துறையின் அமைச்சர் அவர்களுக்கும் மீண்டும ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Tags : Udayanithi ,Stalin , Transgender people should be given jobs in temples too: Udayanithi Stalin's insistence in the legislature!
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...