×

தலைநகரை அப்டேட் செய்யும் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் தயார்!: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் புத்துயிர் பெறுகிறது..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற போது மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் சிங்கார சென்னை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன் பிறகு அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது சிங்கார சென்னை 2.0 புத்துயிர் பெறுகிறது. 
சென்னை மக்களின் தொலைநோக்கு வளர்ச்சி மற்றும் மக்களின் தேவை குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, நகர அழகியல் , கலை, பாரம்பரியம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 23 திட்டங்களை செயல்படுத்துவதற்கான வரைவு அறிக்கையையும் தயார் செய்துள்ளனர். அதன்படி ‘ப்ராஜக்ட் புளூ’ என்ற பெயரில் திருவெற்றியூர் தொடங்கி மெரினா, நீலாங்கரை வரை கடற்கரை பகுதிகள் அழகுபடுத்தப்பட உள்ளன. 
சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் இனிமையாக நேரத்தை செலவிட நவீன பூங்காக்கள், வண்ண விளக்குகள் உள்ளட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன. மாநகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பழைய பாலங்களை புதுப்பிக்கப்படுவதோடு புதிய மேம்பாலங்கள், சுரங்க நடைபாதைகளும் அமையவுள்ளது. அதுமட்டுமின்றி பாண்டிபஸார் போன்று ஸ்மார்ட் சாலை வசதி, டிஜிட்டல் மின் மயானங்கள், ரயில் நிலையங்களை சுற்றி கூடுதல் கட்டமைப்பு உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன. 
தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், திறன் வளர்ச்சி மற்றும் அறிவியல் பூங்காக்கள் அமையவுள்ளது. சென்னையின் அடையாளங்களாக திகழும் பழைய கட்டிடங்களும் புதுப்பொலிவு பெறவுள்ளது. அண்ணாநகர் டவர் புனரமைக்கப்பட உள்ளது. நகரின் பொது சுவர்களில் தமிழர்களின் கலை, பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் வகையிலான வண்ணமயமான ஓவியங்களும் வரையப்பட உள்ளது. 
நெரிசல் மிகுந்த பகுதிகளில் பல அடுக்கு நவீன வாகன நிறுத்தும் இடமும், குறுகிய தூர பயண வசதிக்காக பேட்டரி வாகனங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் அமையவுள்ளது. 
சிங்கார சென்னை 2.0 தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவும் மாநகராட்சி  திட்டமிட்டுள்ளது. தலைநகரை அப்டேட் செய்யும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். 

The post தலைநகரை அப்டேட் செய்யும் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் தயார்!: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் புத்துயிர் பெறுகிறது..!! appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,Singhara Chennai ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு