×

கைலாசாவில் இருந்து நேரலை மூலம் மதுரை சித்திரை திருவிழாவை தரிசித்த சர்ச்சை சாமியார் நித்யானந்தா: பக்தர்களுக்கு அறுசுவை உணவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை சர்ச்சை சாமியாரான நித்யானந்தா நேரலை மூலம் தரிசித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள், கைலாசாவில் இருந்தவாரே நித்யானந்தா சித்திரை திருவிழாவை காண்பதற்கான நேரடி வசதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சித்திரை திருவிழாவை நேரலையில் காண்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படி நித்யானந்தா உத்தரவிட்டிருந்தார். அதன்படி பக்தர்கள் நேரலை செய்தனர். இதன் மூலம் நித்யானந்தா சித்திரை திருவிழாவை நேரலையில் கண்டுகளித்தனர். இதையடுத்து நித்யானந்தா உத்தரவுப்படி, ஆசிரமம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஏராளமான பெண்கள் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு சென்று பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அறிவிப்பு வெளியானது முதல் கைலாச நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. “நானே பரமேசுவரனின் அவதாரம், மீனாட்சி அம்மனின் மறுபிறவி” என்று நித்யானந்தா அடிக்கடி குறிப்பிடுவார். அதனை நினைவுகூரும் வகையில் பக்தர்கள் மீனாட்சி அம்மனின் வடிவில் நித்யானந்தாவை ஸ்தாபித்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோலத்தில் நித்யானந்தா இருப்பது போன்ற படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Tags : Samiyar Nithyananda ,Madurai Chithrai Festival ,Kailasa , Kailasa, Live, Madurai Chithirai Festival, Nithyananda
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் -...