×

கோயில்களில் வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு திருவிழாக்களுக்கு தயார் நிலையில் வைக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுரை.!

சென்னை: திருக்கோயில்களில் உள்ள சுவாமி புறப்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு திருவிழாக்களுக்கு தயார் நிலையில் வைக்க மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள சுவாமி புறப்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு திருவிழாக்களுக்கு தயார் நிலையில் வைக்க மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

அதன்படி முதுநிலை திருக்கோயில்களான பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், மற்ற உற்வசங்கள் நடைபெறும் திருக்கோயில்களில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் சுவாமி வாகனங்களான ரிஷப வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேணு வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், குதிரை வாகனம், பைரவர் வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்பட பல்வேறு சுவாமி வாகனங்கள் பழுது பார்த்து செப்பனிட்டு பக்தர்கள் மனம்மகிழும் வகையில் வருடாந்திர உற்சவ காலங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் செய்து வைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான மற்றும் உபயதாரர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக சில திருக்கோயில்களில் விமர்சியாக திருவிழாக்கள் நடைபெறவில்லை. தற்போது தளர்வுகள் நீக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களின் வேண்டுகோளின்படி திருவிழாக்களில் சுவாமி வாகனம் உலா வர அனுமதிக்கப்பட்டு திருக்கோயிலின் உள்பிரகாரங்களில் தங்கத்தேர்கள் மற்றும் வெள்ளித்தேர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் மரத்தேர்களும் திருவிழாக் காலங்களில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு தேர்களும் பழுதுகள் இருந்தால் பழுதுகள் நீக்கப்பட்டு திருத்தேர்கள் வீதியுலா வருகின்றன. தற்போது பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது சுவாமி திருவீதியுலா வருவதற்கு ஏற்றவாறு வாகனங்களின் அடிப்பகுதியில் உள்ள படிச்சட்டங்கள் சீரமைக்கும் பணி மற்றும்    பழுதடைந்துள்ள பாகங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


Tags : Minister ,Sakerbabu , Minister Sekarbabu advises to repair vehicles in temples and keep them ready for festivals!
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...