×

நாடு முழுவதும் 17.78 லட்சம் ஏக்கர் ராணுவத்துக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பிரமாண்ட பணி முடிந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் குவிந்துள்ள ராணுவத்துக்கு சொந்தமான 17.78 லட்சம் ஏக்கர் நிலங்களையும், இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிரோன்கள், செயற்கைக்கோள்கள் மூலமாக ஒன்றிய அரசு அளந்துள்ளது. பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக நாடு முழுவதும் 17.78 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளன. இவற்றில் பல மலைப்பாங்கான இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியிலும் அமைந்துள்ளது. இவற்றை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சர்வே செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது கன்டோன்மென்ட் பகுதிக்குள் 1.61 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலமும், கன்டோன்மென்ட்டுக்கு வெளியே 16.17 லட்சம் ஏக்கரையும் அளவிடும் பிரமாண்டமான பணி நிறைவடைந்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு, முதல் முறையாக நவீன சர்வே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு துறையின் முழு நிலமும் அளவிப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது மிகப்பெரிய சாதனை என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. ராஜஸ்தானில் பல லட்சம் ஏக்கர் ராணுவ நிலங்களை ஆய்வு செய்ய, டிரோன் பட அடிப்படையிலான சர்வே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாக கொண்டும் நிலங்கள் சர்வே செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பு நிலத்தை சிறப்பாக காட்சிப்படுத்த 3டி மாடலிங் நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம், மொத்தம் 17.78 லட்சம் ஏக்கரில் கடந்த 3 மாதங்களில் மட்டுமே 8.90 லட்சம் ஏக்கர் நிலம் கணக்கெடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையில் நிகழ் நேர மாற்றம் கண்டறிதல் மூலமாக ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

டிரோன்கள், செயற்கைக்கோள் மூலம் நடந்தது ஆக்கிரமிப்பாளர்கள் வசமிருந்தவைகளும் மீட்பு
* இந்த சர்வே செய்யும் பணியில் எலக்ட்ரானிக் டோட்டல் ஸ்டேஷன், டிபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் போன்ற நவீன சர்வே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகத் துறையின் புள்ளி விவரங்களின்படி, பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக 17.99 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
* இதில் சுமார் 1.61 லட்சம் ஏக்கர் 62 கன்டோன்மென்ட்டுகளில் அமைந்துள்ளது. 16.38 லட்சம் ஏக்கர் கன்டோன்மென்ட்டுக்கு வெளியில் உள்ளது. இவற்றில், 18,000 ஏக்கர் வாடகைக்கு எடுக்கப்பட்டது அல்லது பிற அரசு துறைகளுக்கு மாற்றப்பட்டதால் அது பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Tags : The massive task of surveying 17.78 lakh acres of army-owned land across the country has been completed
× RELATED ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பலி: கேரளாவில் பரிதாபம்