×

பொங்கல் பண்டிகையை ஒட்டி பிரமாண்டமான ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சி

* சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் ஜன.14 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது
* 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு
* தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பாரம்பரிய கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16ம் தேதி சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் ‘நம்ம ஊர் திருவிழா’ நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை வாழ் மக்களில் பலர் நாட்டுப்புற கலைகள், கிராமிய கலைகள் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலும், அவை என்ன என்பதை தெரியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதன்படி, சென்னை நகர் மக்களும் கிராமத்து கலை மற்றும் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, மயிலாட்டம், பொம்மலாட்டம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, கும்மி ஆட்டம். கொம்பு இசை, பறையாட்டம், சிலம்பாட்டம், கிழவன்-கிழவி ஆட்டம், காவடி ஆட்டம், புலி ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது, ‘சென்னை சங்கமம்’ என்ற மிகப்பெரிய கிராமிய விழா சென்னையில் அரங்கேற்றப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி 4, 5 நாட்கள் 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் தமிழக அரசு சார்பில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோன்று மயிலாட்டம், பொம்மலாட்டம், தாரை தப்பட்டை முழங்க கிராமத்து திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரம்பரிய கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் 1.7.2021 அன்று நடத்தப்பட்ட கலை பண்பாட்டுத்துறை  தொடர்பான  ஆய்வு கூட்டத்தில்  கிராமிய கலைஞர்களை கொண்டு சென்னையில்  பிரம்மாண்டமான கலை விழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 4.9.2021 அன்று  2021-2022ம் ஆண்டு துறை மானிய கோரிக்கையின்போது தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினை சார்ந்த பாரம்பரிய கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும். இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டில் இருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்.

அவரது அறிவிப்பினை தொடர்ந்து, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 18.11.2021 வாயிலாக தமிழர் திருநாளான பொங்கல்  பண்டிகையினையொட்டி தமிழகத்தினை சார்ந்த பாரம்பரிய கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டுதோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமும்) 3 நாட்கள் நடத்துவதற்கு ரூ.91,00,000 தொடரும் செலவினமாக அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. அரசாணையினை செயல்படுத்தும் வகையில், ‘நம்ம ஊரு திருவிழா’ எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமிய கலைகளை வெளிப்படுத்தும் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு, சென்னையில் 7 இடங்களில்  ஜனவவி 14, 15, 16 ஆகிய  மூன்று நாட்கள்  கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமிய கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘நம்ம ஊரு திருவிழாவை’ சீரும், சிறப்புமாக நடத்துவது தொடர்பாக  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலை பண்பாட்டுத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர், காவல்துறை துணை ஆணையர், போக்குவரத்துத்துறை துணை ஆணையர், நேரு விளையாட்டரங்கத்தின் முதுநிலை மேலாளர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை இயக்குநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சென்னையில் நடத்தப்படுவதை போன்றே மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திட தேவையான நடவடிக்கைமேற்கொள்ள அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுத்திட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Namma Ooru Festival ,Pongal festival , A grand 'Namma Ooru Festival' art show on the occasion of Pongal
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...